Saturday, 20 February 2021

உடலை உறைய வைக்கும் -7° டிகிரி குளிரில் தனியே நான் - சிம்லா மணாலி




31.12.2019 காலை 6 மணி.
பேருந்தில் இருந்து தூக்க கலக்கத்தில் இறங்கி பஸ் ஸ்டான்டில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தேன். குளிரில் உடல் நடுங்கிய படியே இருக்க , கண்ணை திறந்து நான் பார்த்த காட்சி , எனக்குள் அந்த நொடியில் ஏற்படுத்திய பேரானந்தத்தை வார்த்தைகளில் என்னால் விவரிக்கவே முடியாது. 2019 ஆம் ஆண்டின் முதல் நாளில்,  நான் வாட்ஸ்சப் ஸ்டேடஸில் சில இடங்களை பட்டியலிட்டு, அந்த இடங்களுக்கு எல்லாம் சென்று வர வேண்டும் என நினைத்தவற்றில், கடைசியாக மிச்சம் இருந்த ஒன்றே ஒன்று, அந்த ஆண்டின் கடைசி நாளில் வெற்றிகரமாக நிறைவேற உள்ள சந்தோஷம். நான் பார்த்த காட்சியின் சந்தோஷத்தை உடனே என் நண்பர்களில் யாருக்காவது தெரியப்படுத்த வேண்டும் என, நான் என்னை இந்த நீண்ட பயணத்துக்கு வழி அனுப்பி வைத்த தம்பி ஹரிஷ்க்கு வீடியோ கால் செய்து என் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டேன். அப்படி என்னத்த தான்டா பார்த்த நீ?  என்று நீங்கள் கேட்பது எனக்கு புரியுது. இந்தியாவின் வடக்கே இமயமலை தொடர்கள் சூழ்ந்த மாநிலமான இமாச்சல் பிரதேசத்தில், இந்தியாவின் தலைசிறந்த மலை வாசஸ்தலங்களில் ஒன்றான மணாலியில் தான் அந்த கண்கொள்ளா காட்சியை அந்த ஊரின் பேருந்து நிலையத்தில் இருந்து அந்த காலை வேளையில் கண்டேன். பனி சிகரங்களால் சூழப்பட்ட ஊர் மணாலி. கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை நீண்ட பனி மலைகளாக காட்சி தருகிறது. திரைப்படங்களில் மட்டுமே நான் பார்த்த பனிமலைகளை கண்முன்னே காணும் மகிழ்ச்சி. பனி மலைகளை தூரத்தில் இருந்து காணும் ஆனந்தம். என்னை அந்த காட்சி கையில் பனியை எப்பொழுது எடுத்து விளையாடுவோம் என தூண்டியது. ஆனால் அங்கு நிலவிய உறை நிலைக்கும் கீழான குளிர் என்னை நடுநடுங்க வைத்தது. சரி ! நான் எப்படி மணாலிக்கு தன்னந்தனியே வந்து சேர்ந்த கதைய பார்ப்போம்.

2019ஆம் ஆண்டின் டிசம்பர் 23 ஆம் தேதி தென் தமிழகம் நோக்கி பயணப்பட்ட நான் அங்கு தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் பார்த்துட்டு டிசம்பர் 25ஆம் தேதி கன்னியாகுமரி ல டெல்லி போற ரயில் ஏறி அப்புறம் டெல்லி,  பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ், பாகிஸ்தான் எல்லையான அடாரி வாகா பார்டர், சண்டிகர் என அலைந்து திரிந்து டிசம்பர் 30ஆம் தேதி அதிகாலையில் அரியானா - ஹிமாச்சல் பிரதேச எல்லையில் உள்ள கல்கா என்னும் கிராமத்திற்கு சென்று அடைந்தேன். இந்த இடத்தில் இருந்து தான் சிம்லா விற்கு செல்ல ரயில் உள்ளது. 

இந்தியாவில் ரயில் பயணங்கள் செய்ய சிறந்த ரயில் வழித்தடங்களில் கல்கா - சிம்லா இடையே இயக்கப்படும் இமாலயன் ரயிலுக்கும் இடம் உண்டு. இந்த ரயிலில் செல்லுவதற்காகவே நான் கல்கா வுக்கு வந்து சேர்ந்தேன். இமயமலையின் அடிவாரத்தில் கடல் மட்டத்தில் இருந்து 2152 அடி உயரத்தில் உள்ள கல்கா வில் இருந்து 95 கி.மீ க்கு பல மலைகளை 20 ரயில் நிலையங்கள் , 103 குகைகள், 912 வளைவுகள், 969 பாலங்களில் பயணித்து கடந்து சென்றால் கடல் மட்டத்தில் இருந்து 6808 அடி உயரத்தில் உள்ள சிம்லா வை அடையலாம். இந்த ரயில் பயணம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரயில் போலவே உலகப்புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்தது. யுனெஸ்கோ வால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஒன்று. 

கல்கா வில் இருந்து சிம்லா செல்ல சில ரயில்களே உள்ள நிலையில் , அனைத்து ரயில்களிலும் டிக்கெட் ரிசர்வ் செய்யலாம் என்றால் , விடுமுறை காலம் என்பதால் ஏற்கனவே டிக்கெட்கள் விற்று தீர்ந்து விட்டது . ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் நான் கல்கா வில் உள்ள டிக்கெட் கவுண்டரில் விசாரித்த போது ஒரு முன்பதிவில்லாத ரயில் சிம்லா வுக்கு கிளம்ப தயார் நிலையில் இருப்பதாக என்னிடம் சொல்லப்பட்டது. உடனே அந்த ரயிலுக்கான டிக்கெட் எவ்வளவு என கேட்டு ஒரு டிக்கெட் எடுத்து கொண்டு அந்த ரயில் இருக்கும் ப்ளாட்பாரத்திற்கு ஓடினேன். அந்த உலகப்புகழ் பெற்ற ரயில் பயணத்திற்கான கட்டணம் வெறும் ரூபாய் 25 தான். பல மலைகளைக் கடந்து சிம்லா செல்வதற்காக தயார் நிலையில் இருந்த ரயிலில் எனக்கான இருக்கை தேடி நான் அலைந்த போதுதான் தெரிந்தது அனைத்து இருக்கைகளும் ஆக்கிரமிக்கப்பட்டது என்று. ரயிலின் வலதுப்புறமாக நாம் அமர்ந்து இருந்தால் மட்டுமே இயற்கை காட்சிகள் தெளிவாக தெரியும் என்பதால் நான் கடைசி பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்ய முடிவு செய்தேன். காலை சரியாக 8 மணிக்கு டீசல் என்ஜின் பொருத்திய மலை ரயில் கல்காவில் இருந்து தன் பயணத்தை தொடங்கியது. 








நான் கடைசி பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த போது, என்னுடன் உத்தர பிரதேசத்தை சேர்ந்த தந்தையும் மகனும் படிக்கட்டு பயணம் செய்தனர். சிறிது நேர அவர்களுடன் உரையாடி விட்டு மலை மேல் பாம்பு போல ஊர்ந்து செல்லும் ரயிலில் இருந்து கீழே பள்ளதாக்கில் தெரியும் கிராமங்களை கண்டு ரசித்தேன். அங்கு நிலவிய குளிர் 7° டிகிரி. மலை மேல் ஏற ஏற குளிரும் கூடியது. அன்ரிசர்வ்டு ரயில் என்பதால் ரயிலில் அளவு அதிகமான கூட்டம். சில பயணிகள் ரயில் என்ஜின் பின்புறம் இணைக்கப்பட்டு இருந்த மேற்கூரை இல்லாத ஒரு பெட்டியில் ஏறி பயணம் செய்ய தொடங்கினர். மலையில் உள்ள சில ரயில் நிலையங்களுக்கு இந்த ரயிலில் பெரிய தொட்டியில் நீர் நிரப்பி கொண்டு செல்ல அந்த பெட்டி பயன்படுத்தப்பட்டது. பலர் அந்த பெட்டியில் ஏறி பயணம் செய்ய விரும்பி அதில் ஏறினார்கள். ஒரு ரயில் நிலையத்தில் அந்த பெட்டியில் இருந்த நபர்களை காவலர் ஒருவர் கீழே இறக்க முயற்சிக்க அது தோல்வியில் முடிந்தது. பின்பு நானும் அந்த கும்பலில் ஐக்கியமாகி டாப்லேஸ் கோச் டிரையின் டிராவல் செய்தேன். 




மணிரத்னம் இயக்கிய உயிரே திரைப்படத்தில் வரும் "தைய தைய தையா தையா" பாடலை பார்த்தவர்களுக்கு தெரியும், ஷாரூக்கான் மலை ரயிலில் மேற்கூரை இல்லாத ஒரு பெட்டியில் நடனமாடி கொண்டே செல்லும் காட்சி. அது போலவே என்னுடன் அந்த பெட்டியில் இருந்தவர்கள் ப்ளூடூத் ஸ்பீக்கரில் பாடல்களை போட்டு கொண்டு நடனமாடி வந்தார்கள். நானும் அதில் இணைந்து சிறிது நேரம் நடனமாடி மகிழ்ந்து இருந்தேன். பல குகைகளையும், பல உயரமான பாலங்களை கடந்து சென்ற என் பயணம் அந்த வழித்தடத்திலேயே நீளமான போராக் குகையான ஒரு கிமீ க்கு அதிகமான நீளம் கொண்ட குகையை கடந்து சென்றது. இந்த குகைக்கு பின்னால் ஒரு சோக கதை உள்ளதாம். இங்கு குகையை குடைய போரக் என்னும் ஆங்கில பொறியாளர் நியமிக்கப்பட்டார். அவர் மலையின் இரு முனைகளில் இருந்து குடைய தொடங்கி இந்த குகையை உருவாக்க திட்டமிட்டார். ஆனால் இருமுனையில் இருந்து குடைந்த முயற்சி வெற்றி பெறவில்லை. எனவே ஆங்கிலேயே அரசு , அவர் அரசின் நிதியை வீணடித்த காரணத்தால் இவருக்கு அபராதம் விதித்தது. இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் தன் நாயுடன் முடிவு பெறாத குகையில் நடைபயணம் சென்ற போது தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் நினைவாக பின்பு வேறு ஒரு பொறியாளர் வெற்றிகரமாக முடித்த குகைக்கும்,  அந்த குகையின் முடிவில் வரும் ரயில் நிலையத்திற்கு அவரின் பெயர் சூட்டப்பட்டது.








இவ்வாறாக பல மலைகளை கடந்து மதியம் 2.45 மணிக்கு நான் சென்ற மலை ரயில் சிம்லா நகரை சென்று அடைந்தது. நான் சிம்லா வுக்கு சென்றதற்கான முக்கிய காரணம் பனிப்பொழிவு அல்லது பனி பரவிய இடத்தை காண வேண்டும் என்பதால் தான். ஆனால் நான் சிம்லா சென்ற காலமானது குளிர் காலத்தின் தொடக்கம் என்பதால் என் மனம் ஆனந்தப்படும் அளவு பனியை பார்க்க முடியவில்லை. நான் ஊருக்கு வெளியே இருந்த சிம்லா ரயில் நிலையத்தில் இருந்து ஊரின் மையப்பகுதிக்கு செல்லலாம் என முடிவு செய்தேன். ஆனால் சிறிது நேரம் மொபைல் சார்ஜ் செய்யலாம் என அந்த ரயில் நிலையத்திலேயே இருந்து விட்டு சிம்லா நகரின் மையப்பகுதிக்கு நடந்தே சென்றேன்.
இரண்டு கிமீ க்கும் அதிகமான தொலைவுக்கு பொறுமையாக அந்த ஊரின் அழகை ரசித்து கொண்டே நடந்து சென்றேன். பல கட்டிடங்களை காணும் போது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களாக இருந்தது. ஒரு கடையில் பர்கர் வாங்கி சாப்பிட்டு என் பசியை போக்கி கொண்டேன். முதலில் அந்த ஊரின் மைய பகுதியான மால் ரோடுக்கு நடந்து சென்றேன். மாலை வேளையில் சூரியன் முன்னதாக மறைய தொடங்க குளிரின் தாக்கம் கூட தொடங்கியது. நான் சென்ற இடமான அந்த பகுதியில் தான் முக்கியமான கொண்டட்டங்களுக்கு மக்கள் ஒன்று கூடுவார்கள். நான் அங்கு மரத்தால் கட்டப்பட்டு இருந்த பழமையான கட்டிடங்களையும் அதன் கலைத்திறனை கண்டு ரசித்து விட்டு அங்கே இருந்த ஒரு பழமையான சர்ச் ஒன்றை காண சென்றேன். தனிமையில் நான் அந்த இடத்தில் சுற்றி திரிந்த போது அங்கே தமிழ் பேசும் ஒரு குடும்பத்தை சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன். குடும்பமாக சுற்றுலா வந்து இருந்த அவர்களிடம் என் பனிப்பொழிவு அல்லது பனியால் சூழப்பட்ட இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையை சொல்லி விசாரித்து சில ஐடியா களை பெற்று கொண்டேன். எனக்கு சிம்லா வில் ஏமாற்றமே மிஞ்சியது, ஏனெனில் நான் ஆசைப்பட்டதை என்னால் பார்க்க முடியாத வருத்தம். ஆனால் கண்டிப்பாக நான் ஆசைப்பட்டதை பார்க்காமல் ஊர் திரும்ப கூடாது என்ற எண்ணம். அப்பொழுது தான் அங்கே பனி போர்த்திய மைதானத்தில் பனியில் ஸ்கேட்டிங் செய்யும் சிறுவர்களை பார்த்து அங்கே சென்று அந்த விளையாட்டை சிறிது நேரம் ரசித்து கொண்டு இருந்தேன். 







சிம்லா வில் பனியை பார்த்து பரவசப்படும் அளவு எனக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்படவில்லை என தோன்றிய போதே "திரிஷா இல்லனா நயன்தாரா" கதையாக நான் மணாலி செல்ல முடிவெடுத்தேன். நான் இணையத்தில் சிம்லா வில் பனிப்பொழிவை பார்த்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போல் ஏன் நான் சென்ற போது சிம்லா இல்லை என விசாரித்த போது தான் தெரிந்தது , நான் சிம்லா சென்ற நேரம் தான் பனிப்பொழிவின் தொடக்க காலம். இன்னும் இரண்டு வாரம் கழித்து அதாவது நம்ம ஊரு பொங்கல் டைம்ல தான் இங்க பனிப்பொழிவு வேற லெவல்ல இருக்கும் னு அங்கு இருந்தவங்க சொன்னாங்க. மணாலி என்னை ஏமாற்றாது என்னும் நம்பிக்கையில் சிம்லா டூ மணாலி செல்ல இமாச்சல் ரோடுவேஸ் அரசு பஸ்ஸில் இரவு பயணம் செய்ய டிக்கெட் புக் பண்ணேன். நான் மணாலி செல்ல பஸ் ஏற சிம்லா நகரின் வெளியே உள்ள இண்டர் ஸ்டேட் பஸ் ஸ்டான்ட் க்கு நடந்தே சென்றேன். ஒரு மணி நேர நடைபயணத்தில் மூன்று கிமீ தொலைவில் இருந்த பஸ் ஸ்டாப் க்கு நான் மணாலி போக இருக்கும் பஸ் பிடிக்க வந்து சேர்ந்தேன். மொபைலில் சார்ஜ் குறைந்து கொண்டே இருக்க,  மொபைல் சார்ஜ் போடுவதற்காகவே நான் என் டின்னரை சார்ஜ் போட வசதி உள்ள ஹோட்டல் தேடி அலைந்தேன். எப்படியோ ஒரு ஹோட்டலில் ப்ளக் பாயிண்ட் க்கு பக்கத்து மேசையில் இடம் கிடைக்க ஒரு வெஜ் ரைஸ் ஆர்டர் செய்து மெதுவாக சாப்பிட்டு கொண்டே மொபைல் சார்ஜ்ம் ஏற்றி கொண்டேன். பவர் பேங்க் கொண்டு போகாத என் தவறை அப்பொழுது உணர்ந்து கொண்டேன். சிறிது கழித்து இரவு 8 மணிக்கு மேல் மணாலி செல்லும் அந்த பஸ்ஸை தேடி கண்டுபிடித்து என் இருக்கையில் அமர்ந்து கொண்டேன். அப்பொழுது குளிர் -2° டிகிரி செல்சியஸ். ஆத்தி ! இங்கவே இவ்வளவு குளிரா இருக்கே ! மணாலி ல எப்படி இருக்குமோ னு அந்த இரவை அந்த பஸ்ஸிலேயே கழிக்க முடிவு செய்தேன். அந்த பேருந்து முழுவதும் பயணிகள் நிரம்பிய பின்னர் என் ஆசையை நான் நிறைவேற்றி கொள்வதற்கான இடத்திற்கு செல்வதற்கான பயணம் அந்த முன்னிரவில் தொடங்கியது.

.


2019ஆம் ஆண்டின் கடைசி நாள் காலையில் மணாலி பஸ் ஸ்டான்டில் தனியாக நான் நின்று கொண்டிருந்தேன். எனக்குள் ஒரே மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓட,  அந்த நாளில் என்ன செய்யலாம் என்று திட்டம் போட்டேன். முதலில் மொபைல் சார்ஜ் போட ப்ளக் பாயின்ட் தேடி அந்த பேருந்து நிலையத்தில் அலைந்தேன். என் லக், எப்படியோ எனக்கு ப்ளக் பாயின்ட் கிடைக்க நான் மொபைல் சார்ஜ் செய்து கொண்டேன். பயணங்களில் பவர் பேங்கின் அருமை இந்த பயணத்தில் உணர்ந்தேன்.  நான் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கொட்டி கிடக்கும் பனியை பார்க்க மணாலியில் இருந்து 14 கிமீ தொலைவில் உள்ள சோலாங் வெலி என்னும் இடத்திற்கு செல்ல முடிவு செய்தேன். மணாலி சென்றால் அனைவரும் கண்டிப்பாக செல்லும் இடங்களில் முக்கியமான இடம் இந்த சோலாங் வெலி. பேருந்தில் கிளம்புவதற்கு முன்பு ஒரு டீ குடிக்கலாம் என ஒரு கடைக்கு சென்றது தவறாக போய் விட்டது. அந்த டீக்கடைக்கார பெண் எனக்கு அவர் பேசும் மொழி தெரியாத காரணத்தினால் பத்து ரூபாய் டீக்கு கூடுதல் விலை கேட்டு மிரட்டி வாங்கி கொண்டார். நானும் குடிப்பதற்கு முன்பே கொஞ்சம் யோசித்து இருக்கலாம் என என் தவறை உணர்ந்து கொண்டே, எப்படி சோலாங் வெலி செல்வது என யோசனையில் இருந்தேன். நான் சிக்கனமாக பயணம் செய்யும் பயணி என்பதால் தனியே கார், வேன் புக் செய்து போகும் அளவிற்கு பணத்தை வீணடிக்க கூடாது என நினைத்து வேறு வழியை யோசித்து கொண்டே அந்த பேருந்து நிலையத்தில் திரிந்து கொண்டு இருந்தேன். அப்பொழுது தான் அந்த பேருந்து பட்டியல் என் கண்ணில் பட்டது. சோலாங் நல்லா என்னும் இடத்திற்கு அந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்படும் என எழுதி இருந்தது. நான் செல்ல நினைத்த சோலாங் வெலியும் இந்த சோலாங் நல்லா வும் ஒன்றா அல்லது வெவ்வேறு இடங்களா என நான் கூகுள் செய்து பார்த்ததில் இரண்டும் அருகருகே இருக்கும் இடங்கள் என இருந்தது , எனக்குள் ஒரு புது ஐடியா வை கொடுத்தது. நான் ஹிமச்சல் பிரதேஷ் ரோட்வேஸின் பேருந்தில் சோலாங் நல்லா சென்று அங்கு இருந்து நடந்தே சோலாங் வெலியில் உள்ள அந்த பிரபலமான பனி விளையாட்டு மைதானத்திற்கு செல்ல முடிவு செய்தேன். 

சரியாக காலை பத்து மணிக்கு சோலாங் நல்லா செல்லும் எலக்ட்ரானிக் பஸ் நான் இருந்த பஸ் ஸ்டான்டிற்கு வந்து சேர்ந்தது. பெரும் போராட்டத்திற்கு பிறகு எப்படியோ பேருந்தில் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் ஏறி நான் எனக்காக ஒரு இருக்கையை பிடித்து அமர்ந்தேன். பேருந்து முழுவதும் பயணிகளால் நிரம்பி வழிந்தது. நான் ஜன்னலோரமாக அமர்ந்து என் இடதுபுறமாக சாலை ஓரம் இருந்த மணாலியின் இயற்கை அழகை ரசித்து கொண்டே பேருந்தில் பயணம் செய்தேன். பீஸ் ரிவர் என அழைக்கப்படும் நதியின் கரையோரத்திலேயே நாங்கள் சென்ற சாலை அமைக்கப்பட்டு இருந்தது. பனிக்கட்டிகளுடன் பாதி உறைந்த நிலையில் அந்த நதி சலசலத்து ஓடி கொண்டு இருந்தது. பின்பு நான் பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது என் காதில் யாரோ தமிழில் பேசும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன். நான்கு தமிழ் பேசும் சென்னை பசங்க அந்த பேருந்தில் நான் செல்ல இருக்கும் இடத்திற்கு செல்கிறார்கள் என்பதை அறிந்து நமக்கு ஒரு கம்பெனி கிடைத்த மகிழ்ச்சியில் நான் அவர்களுடன் உரையாட தொடங்கினேன்.  அருட்கனி, விக்கி,  லவனேஷ், பவுல் - இவர்கள் நால்வரும் தான் அந்த சென்னை பசங்க. வருடத்தின் கடைசி நாள் மற்றும் நியூ இயர் விடுமுறை என்பதால் நாங்கள் சென்ற மலை சாலை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல கூடிய அளவில் அந்த மலை பாதை இருந்தது. ஏனெனில் சாலையின் இருபுறமும் பனி கொட்டி இருந்ததால் அதில் வாகனங்கள் வழுக்கி கொண்டு சென்றது வாகனம் ஓட்டுவோருக்கு மிகவும் சிரமம். போக்குவரத்து நெரிசல் காரணமாக நாங்கள் சென்ற பேருந்து ஒரு இடத்திலேயே நின்று விட்டது. நானும் சென்னை நண்பர்களும் பேருந்தில் இருந்து இறங்கி நாங்கள் செல்ல இருந்த அந்த பனி விளையாட்டு மைதானத்திற்கு நடந்து செல்ல முடிவெடுத்து நடந்தே சென்றோம். எங்களுடன் பேருந்தில் வந்த ஒருவர் அருகில் இருக்கும் ஒரு மலைகிராமத்திற்கு செல்லும் வழியில் எங்களை அந்த மைதானத்திற்கு வழிக்காட்டியாக இருந்து அழைத்து சென்றார்.



நாங்கள் ஐந்து பேரும் நடுங்கும் குளிரில் நடந்து போய் கொண்டு இருந்த போது, சாலையின் இருபுறமும் நம்மை குளிரில் இருந்தும் மற்றும் நாங்கள் செல்கிற பனி விளையாட்டு மைதானத்தில் எங்களை பாதுகாத்து கொள்ள ஸ்னோ ஷூட் மற்றும் பூட்ஸ் வாடகைக்கு விடும் நபர்கள் கடை விரித்து பிசினஸ் செய்து கொண்டு இருந்தார்கள். மணாலியில் இருந்து நான் இங்கு வந்து சேரும் வரை இது போன்ற பல கடைகளை என்னால் சாலையின் இருபுறமும் காண முடிந்தது. என்னுடன் வந்த நண்பர்கள் ஒரு சாலை ஓர கடையை தேர்ந்தெடுத்து அங்கு எங்களுக்கான பாதுகாப்பு ஸ்னோ ஷூட்களை 250 ரூபாய் வாடகைக்கு வாங்கி கொண்டு நாங்கள் கொண்டு வந்த உடைமைகளை அங்கே வைத்து விட்டு,  எங்களுக்கான ஸ்னோ ஷூட்களை நாங்கள் ஏற்கனவே அணிந்து இருந்த ஆடைகள் மேலேயே அணிந்து கொண்டு, அந்த சோலாங் வெலியில் உள்ள பனி விளையாட்டு மைதானத்திற்கு சென்றோம். 

சோலாங் வெலி - மணாலியில் இருந்து லடாக் செல்லும் சாலையில் 13 கிமீ தொலைவில் உள்ள ஒரு கிராமம். இங்கு உள்ள பரந்து விரிந்த ஒரு மைதானத்தில் குளிர் காலத்தில் பனி படர்ந்து காணப்படும். இந்த இடத்தில் கொட்டி கிடக்கும் பனியில் ஸ்கேட்டிங், மோட்டர் பைக் ரைடு, சிறு குன்றின் மீது இருந்து ரப்பர் டியூப்பில் சறுக்கி கொண்டு வருவது, யாக் எனப்படும் காட்டெருமையில் சவாரி, பாராகிளைடிங், ரிவர் கிராசிங் என பல பனி சார்ந்த விளையாட்டுகள் விளையாடி மகிழ சிறந்த இடம். எனவே சுற்றுலா பயணிகளின் தவிர்க்க முடியாத சாய்ஸ் இந்த இடம். இங்கு நாங்கள் சென்று சேர்ந்த உடன் முதலில் அனைத்து விளையாட்டுகளுக்கான கட்டணத்தை அறிந்து கொள்ள முயன்றோம். அப்பொழுது இந்த விளையாட்டுகளை பேக்கேஜ் அடிப்படையிலான கட்டணம் என எங்களுக்கு அங்கு இருந்த ஒரு ஏஜேன்ட் தெரிவித்தார். நான் கையில் காசு குறைவாக வைத்து இருந்த காரணத்தால் ப்ராகிளைடிங் மட்டும் செல்ல தீர்மானித்து மற்ற விளையாட்டுகளில் பங்கு கொள்ள வில்லை. ஆனால் என்னுடன் வந்த நண்பர்கள் மற்ற விளையாட்டுகளை விளையாட முடிவு செய்து அதில் விளையாட ஒரு ஏஜென்டிடம் பேரம் பேசினார்கள்.  எப்படியோ ஒரு ஏஜென்டை கரெக்ட் செய்து அவர்கள் நான்கு பேரும் அனைத்து விளையாட்டு சாகசங்களையும் செய்தார்கள். எனக்கு அவற்றை செய்யும் ஆசையே இல்லை. ஏனெனில் என் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது எல்லாம் எப்பொழுது பாராசூட்டில் வானில் இருந்து பறந்து வந்து பாராகிளைடிங் செய்வோம் என்று தான். என்னுடன் வந்த நண்பர்கள் அவர்களின் சாகசங்களை விளையாடி மகிழ்ந்த நேரத்தில் நான் அங்கு தனியாக ஸ்பீக்கரில் பாடல்களை போட்டு நடனம் ஆடி கொண்டு இருந்த ஒரு வட மாநில இளைஞர்கள் குழு உடன் இணைந்து ஒரு நடனம் ஆடி மகிழ்ந்தேன். அங்கு இருந்த மைதானம் முழுவதும் சுற்றுலா பயணிகளால் நிறைந்து இருந்தது. 









என் நண்பர்கள் அடுத்ததாக பாராகிளைடிங் செய்ய தயார் ஆன போது நானும் அவர்களுடன் இணைந்து கொண்டேன். நாங்கள் சோலாங் வெலி சென்றது ஆன் சீசன் என்பதால் அனைத்து விளையாட்டுகளும் கூடுதல் கட்டணம். எப்படியோ நாங்கள் ஐந்து பேரும் பாராகிளைடிங் செய்ய அங்கு இருந்த டிக்கெட் கவுண்டரில் பணத்தை கட்டி புக் செய்தோம். இரண்டு விதமான கட்டணங்கள் அங்கு வசூலிக்கப்பட்டது. குறைவான உயரத்தில் இருந்து குதிக்க ரூ.1000/- இதில் நாம் பைலட் உடன் ஒரு குறிப்பிட்ட உயரம் மலை மீது ஏறி அங்கு இருந்து பாராசூட்டில் பறந்து வர வேண்டும். மற்றொன்றில் ரூ.3300/- இதில் ரோப் கார் உதவியுடன் மலையின் உச்சிக்கு சென்று அங்கு இருந்து பாராசூட்டில் பறந்து வர வேண்டும். நாங்கள் குறைந்த உயர கட்டணத்தை தேர்வு செய்து , அங்கு இருந்த ஒரு படிவத்தில் நாங்கள் சுயவிருப்பத்துடன் இந்த விளையாட்டில் ஈடுபடுகிறோம் என கையொப்பமிட்டு விட்டு எங்களுக்கான பைலட் உடன் மலை ஏற தொடங்கினோம். நாங்கள் பறந்து வரவுள்ள பாராசூட்டை மேலே தூக்கி செல்ல இதற்கு என்றே சுமை தூக்கும் தோழர்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தார்கள். நானும் பைலட் மற்றும் அந்த சுமை தூக்கும் தோழர், கடினமான அந்த பனிக்கட்டிகள் சூழ்ந்த பாதையில் மலை மேலே ஏறினோம். சிறிது தவறினால் கூட பலத்த காயங்கள் ஏற்படும் அளவு கடினமான வழுக்கும் பனிக்கட்டிகளில் நிதானமாக கால் வைத்து எப்படியோ அந்த ஜீரோ டிகிரி செல்சியஸ்க்கு கீழ் உள்ள குளிரில் தட்டுதடுமாறி மலை ஏறி நாங்கள் குதிக்க தயாராகும் பாயிண்ட்டை அடைந்தோம். எனக்கு முன்பு குதிக்க சிலர் அங்கு தயார் நிலையில் இருக்க, அதில் ஒருவர் பைலட் உடன் குதிக்கலாம் என பாராசூட்டை விரித்து பறக்க தயாராக இருந்த சில வினாடிகளில் அங்கு திடீர் என மாறிய காற்றின் போக்கு காரணமாக அவர்கள் பறக்க தொடங்காமல் காற்றின் போக்கு சரியாகும் வரை காத்து இருந்தார்கள். எப்படியோ சிறிது நேரத்தில் அவர்கள் பறந்து சென்ற உடன் நான் அடுத்து பறக்க தலையில் ஹெல்மெட் அணிந்து பாராசூட்டில் என் உடலை மாட்டி கொண்டு என் பைலட் உடன் பறக்க தயாராக இருந்தேன். மனதில் பெரும் மகிழ்ச்சி பொங்கி வர , கையில் மொபைலில் நான் பறக்கும் காட்சியை வீடியோ எடுக்க ஆன் செய்து நான் பறக்க தொடங்கினேன். என் வாழ்க்கையில் நான் வானில் பறந்த முதல் அனுபவம். சுமார் 2 நிமிடங்கள் வானில் சுற்றி சுழன்று பனிப்போர்த்திய மலையின் அழகை ரசித்து கொண்டே பறந்து வந்தேன். கையில் இருக்கும் மொபைல் கீழே விழ கூடாது என நான் இறுக்கமாக பிடித்து கொண்டேன். ஆனால் என் கை உறைந்து போய் ரத்தம் ஓட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நிற்க தொடங்கியது. எப்படியோ நான் மொபைலை கிழே விடாமல் சீக்கிரமாக தரையில் லேன்ட் ஆனேன். 



நான் வானில் பறந்து வந்து தரை இறங்கிய பின்பு, நான் வானில் பறந்து வந்த புகைப்படங்களை எடுத்த ஒரு போட்டோக்கிராப்பர் என்னிடம் அதை பகிர ஒரு ரேட் பேச, அவரிடம் பேரம் பேசி எப்படியோ என் புகைப்படங்களை வாங்கி கொண்டேன். நாங்கள் அனைவரும் களைப்பு மிகுதியால் அங்கு இருந்து கிளம்பும் முன்பு அந்த குளிரில் உடலை கதகதப்பாக வைக்க ஒரு டீ குடித்தோம். நான் குடித்த ஆக சிறந்த டீ என சோலாங் வெலியில் குடித்த டீயை சொல்லலாம். ஏற்கனவே வால்பாறையில் குடித்த டீயே சிறந்த டீ என நினைத்து இருந்த நான் அதற்கு ஈடாக ஒரு சுவையான டீயை அங்கு பருகினேன். அப்புறம் பசியாற ஒரு மேகி நூடுல்ஸ் சாப்பிட்டு விட்டு நாங்கள் அடுத்த சாகச விளையாட்டு விளையாட பீஸ் ரிவர் நோக்கி சென்றோம். அங்கு ஓடும் பீஸ் ரிவரில் ரிவர் கிராசிங் தான் அந்த விளையாட்டு. ஒரு நபருக்கு ரூ.500 என சொல்ல நான் அவர்களிடம் பேரம் பேசி ரூ.200 க்கு , அந்த பாதி பனி உருகிய நிலையிலும், மீதி உறைந்த நிலையில் ஓடும் பீஸ் நதியை கடக்க தயார் ஆனேன். ஒரு கயிற்றில் நமது உடல் பெல்ட்டால் இணைக்கப்பட பின்பு அந்த நதியை தொங்கி கொண்டே கடந்து மறுமுனைக்கு சென்று பின்பு மீண்டும் தொடங்கிய இடத்திற்கே திரும்பி வர 10 நிமிடங்கள் எடுத்து கொண்டது. 




கயிற்றில் தொங்கி கொண்டே சென்ற போது தூரத்தில் தெரிந்த பனி போர்த்திய மலையின் பின்னே மறையும் சூரியனின் காட்சி வேற லெவல். எப்படியோ எங்களின் சாகச விளையாட்டுகளை முடித்து கொண்டு மணாலி நகர் நோக்கி புறப்பட தயார் ஆனோம். நாங்கள் அணிந்து இருந்த பனி பாதுகாப்பு உடைகளை வாங்கிய இடத்தில் கொடுத்து விட்டு எங்கள் உடைமைகளை எடுத்து கொண்டு நாங்கள் கிளம்பி சிறிது தூரம் வந்த பிறகே அந்த அதிர்ச்சி காத்திருந்தது. 





சூரியன் மறைய தொடங்கிய பின் நாங்கள் பஸ் பிடிக்க ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்த போது தான் தெரிந்தது 13 கிமீ தொலைவில் உள்ள மணாலி நகருக்கு செல்லும் கடைசி பேருந்து ஏற்கனவே புறப்பட்டு சென்று விட்டது என. இரவு நெருங்க நெருங்க குளிரின் தாக்கம் கூட ஆரம்பித்தது. முதுகில் பெரிய சுமையாக ரக் சக்கை மாட்டி கொண்டு என்ன செய்யலாம் என யோசனை செய்தோம். குளிர் நன்றாக அதிகரிப்பதற்கு முன்பாக நடந்தே மணாலி செல்வது என முடிவு செய்து நடக்க ஆரம்பித்தோம். சாலை ஓரங்களில் குளிரில் இருந்து தப்பிக்க உள்ளூர்வாசிகள் மூட்டி இருந்த தீயில் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் உடலை சூடாக்கி கொண்டே எங்களின் மணாலி நோக்கிய பயணம் தொடர்ந்தது.

மின் விளக்கு வெளிச்சம் இல்லாத மணாலி - லடாக் தேசிய நெடுஞ்சாலையில் நாங்கள் நடந்தே பாதி தூரம் வந்த பிறகு என்னுடன் வந்தவர்கள் வேகமாக முன்னே செல்ல, நான் லிப்ட் கேட்டு செல்ல முடிவெடுத்து பல வாகனங்களில் கை போட்டு அனைத்தும் தோல்வியில் முடிந்தது. மீண்டும் பயணத்தை நடந்தே சிறிது நேரம் தொடர்ந்த பின்பு மீண்டும் லிப்ட் கேட்டு முயற்சி செய்த போது ஒரு மகா பிரபு எனக்கு லிப்ட் கொடுத்து மணாலி நகரில் என்னை இறக்கி விட்டார். அங்கு இருந்து நான் இரவு தங்க பழைய மணாலியில் உள்ள ஏற்கனவே நான் புக் செய்து இருந்த ஹாஸ்டலுக்கு ஒரு கிமீ தூரம் நடந்தே சென்று சேர்ந்தேன். அங்கு எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் முதல் வேளையாக உறைந்து போய் ரத்தம் கட்டி இருந்த என் கால்களை வெந்நீரில் கழுவி என் கால் பனியின் தாக்கத்தால் செயல் இழந்து விடாமல் பாதுகாத்து கொள்ள முடிவு செய்தேன். சிறிது ஓய்வுக்கு பிறகு அந்த ஹாஸ்டலின் மாடியில் புது வருடத்தை கொண்டாட சிறு பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நான் அங்கு சென்று சிறிது நேரம் அங்கு இருந்த போது தான் தெரிந்தது அந்த சூழல் நமக்கு ஒத்து வராது என அங்கு இருந்து புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடக்கும் மணாலியின் மெயின் ஜாங்ஷன் சென்று தனிமையில் புத்தாண்டை அங்கு கூடி இருந்த கூட்டத்துடன் கொண்டாடி விட்டு ஹாஸ்டலுக்கு ஓய்வு எடுக்க திரும்பினேன். நான் மறுநாள் மணாலியில் இருந்து பேருந்து மூலம் டெல்லி செல்ல தயார் ஆனேன்.



- பயணங்கள் தொடரும்.








Friday, 14 August 2020

அழிந்து போன நகரத்தில் , தொலைந்து போன நான் - தனுஷ்கோடி

ஆடியோவில் இந்த கதையை கேட்க கீழே இருக்க லிங்க் அ க்ளிக் பண்ணி கேளுங்க

"காலங்கள் கடந்த பின்னும்
கலைந்துவிட்ட கனவுகளாய்
நினைவுகளை மட்டும் சுமந்து
சோகச்சுவடுகளுடன்...

சிதிலங்களை மட்டுமே
சின்னங்களாய் கொண்டு
திரும்பும் திசையெல்லாம்
திட்டுச்சுவருடன்...

இரும்பு வேலிக்குள்
இதயக்கனத்துடன்...
துப்பாக்கி வேலிக்குள்
தூக்கம் தொலைத்த
நம் சொந்தங்கள்
சுமைகளோடு...வந்திறங்கி
சோகச்சுவடுகள் பதித்த
மணல் திட்டுடன்...

கடைக்கோடி தமிழனின்
காணாமல் போன நகரம்..."

- இப்படி இந்த கவிதையில் சொல்லப்பட்ட காணாமல் போன நகரத்தின் பெயர் தனுஷ்கோடி. அந்த தனுஷ்கோடிக்கு நான் ராமேஸ்வரத்தில் இருந்து 20 கி.மீ நடந்தே போன கதை தான் இது. வாங்க கதைக்குள்ள போலாம்.

தனுஷ்கோடி. தமிழகத்தின் தென்கிழக்கு திசையில் உள்ள ஒரு தீவு நகரம். இங்கிருந்து இலங்கை வெறும் 20 கி.மீ தொலைவு தான்.
20ஆம் நூற்றாண்டில் ஆசியாவில் நடந்த மிகப்பெரிய பேரழிவுகளில் ஒன்று, இந்த நகரின் அழிவு சம்பவம். 1964-ம் ஆண்டு வங்காள விரிகுடாவில் உருவான புயல் தமிழகத்தில் இருந்த மிகப்பெரிய துறைமுக நகரை, இந்தியா - இலங்கை க்கு வணிக பாலமாக இருந்த நகரை துவம்சம் செய்து வாயில் போட்டு கொண்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனுஷ்கோடி நோக்கி போன ரயில் அந்த ஊரை நெருங்கும் முன்னே புயலில் சிக்குண்டு கடலில் மூழ்கி போய் அனைவரும் மாண்டனர். இப்படி வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவு பெரும்துயரை எதிர்கொண்டு இன்று அந்த புயலின் பாதிப்பில் இருந்து தப்பி சிதிலமடைந்து போய் காட்சி தரும் கட்டிடங்கள் மட்டுமே அங்க இருப்பதாகவும் அந்த ஊரை அரசாங்காம் வாழ தகுதியற்ற ஊராக அறிவித்துவிட்டாக பல கட்டுரைகளில் படித்த போதே அந்த அழிந்த போன நகரை பார்க்க வேண்டும் என மனதில் நினைத்து கொண்டேன்.

2017-ம் ஆண்டு நான் நண்பர்களுடன் மூணார் சென்று விட்டு சென்னை திரும்பும் வழியில் ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலத்தில் எனக்கு கிடைத்த எதிர்பாராத பேரனுபவத்தை பெற்று கொண்டு தனுஷ்கோடி சென்று விட்டு ராமேஸ்வரம் திரும்பி அதே நாளில் என் வீட்டிற்கு ரயிலில் கிளம்பினேன். ஆனால் என்னுடைய தனுஷ்கோடிக்கான முதல் பயணம் ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடியை தாண்டி இருக்கும் அரிச்சல்முனை வரை பஸ்ஸில் சென்று மீண்டும் அதே பஸ்ஸில் சூரியன் மறைய தொடங்கிய காரணத்தால் ராமேஸ்வரம் நோக்கி திரும்பி வருவதாக அமைந்தது. அந்த பஸ் பயணத்தில் நான் பேருந்தில் இருந்தே தனுஷ்கோடி செல்லும் பாதையின் அழகையும் தனுஷ்கோடியில் மிச்சம் இருக்கும் சிதிலடைந்த கட்டிடங்களையும் கண்ட காட்சி கண்ணில் பதிந்து மீண்டும் இந்த ஊருக்கு வந்து ஒரு முழு நாளையும் இங்கே செலவழித்து போக வேண்டும் என்ற ஆசை மனதில் தோன்றியது. 

2019-ம் ஆண்டின் செப்டம்பர் மாத முதல் வார கடைசியில் பல நாட்களுக்கு முன்பு போக வேண்டும் என தீர்மானித்த தனுஷ்கோடிக்கு போகணும் னு திடீர் னு ப்ளான் பண்ணி கிளம்ப தயார் ஆனேன். ராமேஸ்வரத்துக்கு போக சென்னை எக்மோர்ல இருந்து தினமும் ரெண்டு டிரையின். அதுல போர்ட் மெயில் எக்ஸ்பிரஸ் ல போலாம் னு ப்ளான். ஏன்னா அந்த டிரையின் தான் மார்னிங் பாம்பன் கடல் பாலத்துல பொழுது விடிஞ்சதும் போற டிரையின். ஆனா அது விழுப்புரம் ல இருந்து திருச்சிக்கு நேரா போகாம ஊரல சுத்திட்டு லேட்டா தான் திருச்சி வரதால நான் அந்த ரயில்ல தாம்பரத்தில ஏறாம இரண்டு மணி நேர தாமதமா தாம்பரம் வர பொதிகை எக்ஸ்பிரஸ் ல திருச்சி வரைக்கும் போய் இறங்கிட்டு அங்க இருந்து ராமேஸ்வரம் போற ஊரலா சுத்திட்டு லேட்டா வர போர்ட் மெயில் டிரையின்ல போக ப்ளான் போட்டேன். அந்த இரண்டு மணி நேரத்த என்னோட எம் சி சி காலேஜ் ஹால் (ஹாஸ்டல்) ல நண்பர்களுடன் செலவிடலாம் அப்படிங்குற காரணத்தால. என் கல்லூரி ஹால் மெஸ்ஸில் டின்னர வழக்கம் போல ஏதோ ஒரு ஜூனியர் அக்கவுண்ட்ல சாப்பிட்டுட்டு செங்கோட்டை போற பொதிகை ரயில்ல பிடிக்க தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் போய் டிக்கெட் கவுண்டர்ல டிக்கெட் எடுத்துட்டு ரயில் வர ஏழாவது ப்ளாட்பார்ம் க்கு போனேன். வெள்ளிகிழமை அப்படிங்குற காரணத்தால் செம கூட்டம். திடீர் ப்ளான் அப்படிங்குறதால அன்ரிசர்வ்ட் பயணம் தான். ஆனா அந்த பயணம் தான் எனக்கு எப்பவுமே பிடிக்கும்.

ஒருவழியா பொதிகை எக்ஸ்பிரஸ் ப்ளாட்பார்ம் க்கு வர நான் அந்த கூட்டத்தில் புகுந்து எப்படியோ உள்ளே நுழைந்தேன். ஆனால் என்னால் கதவை தாண்டி உள்ளே நகர கூட முடியாத அளவு கூட்டம். இந்த அன்ரிசர்வ்டு பயணங்கள்ல இன்னொரு ப்ரப்பளம் என்னனா ரயில் பெட்டியோட உள்ள நாம நகர்ந்து போகவே முடியாது. ஏன்னா சீட் கிடைக்காதவங்க அப்படியே வழியில உட்கார்ந்து தூங்கிடுவாங்க. அதுவும் இரவு நேர பயணங்கள்ல குழந்தைகள் உடன் பெண்கள் அப்படியே வழியில் படுத்து நமக்கு வழியே இல்லாத மாறி ஆக்கிடுவாங்க. நான் உள்ளே மேலும் போக முடியாதப்படி ஒரு இடத்துல மாட்டிக்கிட்டேன். எவ்வளவு முயற்சி பண்ணியும் உட்கார அந்த கூட்டநெரிசல் மிகுந்த ரயில் பெட்டியில சீட் கிடைக்கல. அப்புறம் அப்படியே நின்னுட்டு வந்தேன்.

நான் போன ரயில் செங்கல்பட்டை தாண்டி போய் கொண்டு இருந்துச்சி. அப்போ அந்த கூட்டத்துல தென்காசி பக்கம் இருக்க ஏதோ கிராமத்துக்கு போற ஒரு குடும்பம் டிரையின்ல ஏறி இருந்தாங்க. பெரிய கூட்டுக்குடும்பம் போல. அவங்களாலயும் நான் இருந்த இடத்தை தாண்டி செல்ல முடியாமல் நான் அருகிலேயே மாட்டிக்கிட்டு நின்னுட்டே வந்தாங்க. அதுல வயசான பாட்டி கூட்டத்தை பொருட்படுத்தாமல் அப்படியே கீழே இருந்த கொஞ்ச கேப்பை ஃபில் பண்ணி உட்கார அந்த இடத்துல இன்னும் நெருக்கடி ஆயிடுச்சி. அன்ரிசர்வ்ட் பெட்டி பயணங்கள் எபௌபவுமே இன்னொரு சுவராசியம் சிலர் தரையில் நடக்க இடம் இல்லாம் மேலே கம்பியை பிடித்து இருக்கைகள் மேல் கால் வைத்து தொங்கிட்டே ஒரு இடத்துல இருந்து மற்றோரு இடத்துக்கு போவாங்க. நான் பல தடவை அப்படி பண்ணிருக்கேன்.  இப்படியே நின்னுட்டு தான் திருச்சி வரைக்கும் போகணும் னு கால் வலியில நின்னுட்டு இருக்கும் போது அந்த கூட்டுக்குடும்பத்தில் இருந்த ஒரு சின்ன பொண்ணு ஒரு அக்கா அப்புறம் ஒரு தம்பியிடம் என வழக்கமா என்னுடன் பயணிக்கும் பயணிங்க கிட்ட பேச்சை ஸ்டாட் பண்ற மாறி ஸ்டாட் பண்ணேன். எங்க பேச்சு கலகலப்பா எல்லாரையும் கலாய்ச்சிட்டு அப்படியே போச்சு. நள்ளிரவு நெருங்க எனக்கு தூக்கம் லைட்டா வர நான் நின்னுக்கிட்டே எதிரில் இருந்த கம்பியை எட்டி பிடித்து என் முன்னாடி நின்னுட்டு இருந்த யார் என்றே தெரியாத அண்ணா முதுகில் தலை சாய்ந்து படுத்துக்கிட்டேன். என் பின்னாடி இருந்த அந்த பெரிய குடும்பத்தில் என்னுடன் பேசிட்டு வந்த அக்காவும் என் மீது சாய்ந்து தூங்கிட்டாங்க. எப்படியே ஐந்து மணி நேரத்திற்கும் அதிகமான பயணத்துல திருச்சிய நெருங்கிட்டு இருக்கும் போது அந்த அக்கா சொன்னாங்க உன்ன மாறி டீசன்ட்டான பையன் கூட டிராவல் பண்ணதால எனக்கு எந்த தொல்லைகள் இந்த கூட்டத்துல இல்ல னு சொல்லி என்னை ரொம்ப புகழ்ந்து தள்ளுனாங்க. அதுக்கான காரணம் அந்த அக்கா கடைசி வரைக்கும் தெளிவா சொல்லவே இல்லை. அப்புறம் அந்த சின்ன பையன் காமேஷ் கூட வழக்கம் போல ஒரு செல்பி எடுத்துட்டு திருச்சி ரயில் நிலையத்தில் என்னோட அடுத்த ரயில்க்காக இறங்கினேன். அதிகாலை 2.30 மணிக்கு.



அந்த அதிகாலை வேளையில் தனியே நான் ராமேஸ்வரம் போற ரயில்க்கு வெயிட் பண்ணிட்டு இருந்த அப்போ அந்த நான் இருக்க ப்ளாட்பிராம் க்கு வர போறதா அறிவிப்பு வந்துச்சு. எனக்கு முன்னாடி தாம்பரத்துல கிளம்புனவன் நீ, ஆனா ஊரல சுத்திட்டு லேட்டா வரியே னு அந்த ரயிலா பார்த்து கேட்கனும் போல இருந்துச்சி. அங்க வந்து சேர்ந்த ரயில்ல நான் ஏறினேன். போன ரயில விட கூட்டம் கம்மி தான் இருந்தாலும் இந்த ரயிலயும் உட்கார சீட் கிடைக்கல. ஆனா நல்ல தூக்கம் வேற எனக்கு அதான் அந்த ரயில்ல நான் ஏறுன பெட்டியில இருக்க வழியில் அப்படியே ஒரு ஓரமா படுத்துகிட்டேன். நல்ல தூக்கம். அதிகாலை 5.30 மணி இருக்கும் போது முழிப்பு வந்து எழுந்து படிக்கெட்டில் உட்கார்ந்து ரயில் தண்டாவளம் ஓரமா இருக்க கிராமங்களை அந்த காலை வேளையில் ரசிச்சிட்டு இருந்தேன். அப்போ என் அருகில் ஒரு வயதான பெரியவர் இருந்தார். அவர் கூட வழக்கம் போல பேச்சு கொடுத்து பேச ஆரம்பித்தேன். 

அவர் பெயர் சந்திரன். ராமேஸ்வரம் தீவின் தொடக்கத்தில் இருக்க பாம்பன் தான் அவர் ஊர். மீன் பிடிக்கிறது தான் அவர் தொழில். அவர்கிட்ட பேசிட்டே இருக்கும் போது உங்களுக்கு 1964-ம் ஆண்டு வீசிய புயல் பத்தி தெரியுமா னு நான் கேட்க அவர் சொன்னார்... அந்த புயல் அந்த தீவுக்கு வந்த அப்போ கடல்ல படகுல மீன் பிடிச்சிட்டு இருந்த அவரை அந்த புயல் படகோட கடல்ல கவிழ்த்து விட்டுசாம். அப்புறம் எப்படியே தண்ணில தத்தளிச்சிட்டு இருந்த அவர் கரை சேர்ந்து உயிர் பிழைத்தார் னு கதை சொன்ன அப்புறம் தான் அந்த இயற்கை பேரழிவை கண்ணால் பார்த்த சாட்சியிடம் பேசிய அரிய வாய்ப்பு கிடைத்தது னு கொஞ்சம் சந்தோஷப்பட்டு அவர் கூட பல கதைகள் பேசிட்டே வந்தேன். நாங்க போன ரயில் மண்டபம் ல இருந்து ராமேஸ்வரம் போக பாம்பன் கடல் பாலத்து மேலே மெதுவா ஊர்ந்து போச்சி.



ஏற்கனவே இந்த பாலத்துல எனக்கு கிடைத்த அந்த எதிர்பாராத பேரனுபவத்தை நினைத்து பார்த்துட்டே அந்த தூக்கு பாலத்தையும் கடந்து போனேன் அந்த ரயில்ல. அடுத்த வந்த மண்டபம் ரயில்வே ஸ்டேஷன்ல அந்த பெரியவர் இறங்கி , என்னை பத்திரமா போக சொன்னார். நானும் அவருக்கு டாடா சொல்லிட்டு ராமேஸ்வரம் நோக்கி போனேன். சரியா 8 மணிக்கு மேலே இருக்கும். அந்த கடைசி ரயில் நிலையத்துல இறங்கி பல் துலக்கி, முகத்தை குளிர்ந்த நீரால் கழுவிட்டு நான் திட்டமிட்ட பயணத்தை தொடர்ந்தேன்.
காலை யில நல்ல பசி. சரி! நல்லா சாப்பிடலாம் னு ரயில்வே ஸ்டேஷன் வெளியே இருக்க ஓட்டல்ல வயிறு நிறைய சாப்பிட்டேன். அப்புறம் அங்க இருந்து பொடிநடையா நடந்தே, நம்ம அப்துல்கலாம் ஐயா வீட்டுக்கு போனேன்.
ஏற்கனவே ராமேஸ்வரம் வந்து மத்த இடத்தல பார்த்துட்டதால அப்போ பார்க்காம விட்ட கலாம் ஐயா வாழ்ந்த வீட்டுக்கு போய் சிறிது நேரம் அங்க டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு, அடுத்து நான் அந்த முழு நாளையும் ஒரு இடத்தில் செலவு செய்ய நினைத்த ஊரான தனுஷ்கோடி இருக்க திசையில் நடக்க ஸ்டாட் பண்ணேன். கடந்த முறை நான் ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு அரசு பஸ்ஸில் சென்றேன். அப்பொழுது அந்த சாலையின் இருபுறமும் இருந்த அழகு என்னை அந்த சாலையில் நடந்தே தனுஷ்கோடிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையை உருவாக்கியது.

நான் ராமேஸ்வரத்தில் என் நடைபயணத்தை தொடங்கியபோது, என் கண்ணில் பட்ட போர்டில் தனுஷ்கோடி 22 கிலோமீட்டர் என்றிருந்தது. காலை பத்து மணி இருக்கும், அப்பொழுது தான் வெயில் கொஞ்சம் கொஞ்சமாக தலைகாட்டத் தொடங்கியது. நானும் அந்த சாலையில் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தேன். சிறிது தூரம் சென்றதும் வழக்கம்போல் சாலையில் செல்லும் வாகனங்களில்  லிஃப்ட் கேட்க தீர்மானித்து, அதே போல் லிப்ட்ம் கேட்டேன். எப்பவும் போல எனக்கு உடனே ஒரு பைக்ல லிப்ட் கிடைத்தது. நானும் லிஃப்ட் கிடைச்ச உடனே அவர் பைக்ல ஏறி எதுவரைக்கும் போறாரோ அவர் கூடிய போயிட்டு எனக்கு தோனுற இடத்தில இறங்கலாம் என்று ப்ளான் பண்ணேன். தனுஷ்கோடிக்கு நான் போற அந்தப் பாதையில் ராமேஸ்வரம் தீவில் மக்கள் அதிகமாக வசிக்கிற ஒரு பகுதியிலிருந்து விடைபெற்று ஒரு மிகப்பெரிய வளைவில் ஆள் அரவமில்லாத ஒரு காட்டு வழியா போற அந்தப் பாதையின் தொடக்கத்தில் ஒரு செக்போஸ்ட் இருந்துச்சு. அந்த செக்போஸ்ட் முன்னாடிதான் என்னை அந்த அண்ணா என்னை இறக்கி விட்டார்.

அவர் பெயர் நல்லசாமி. அவர் பைக்கில் இருந்து இறங்கின பிறகுதான் எனக்கு தெரியும் அவர் ஒரு போலீஸ். அவர் போலீஸ்னு கூட தெரியாம அவர்கிட்டயே லிப்ட் கேட்டு நான் கொஞ்ச தூரம் வந்துட்டேன். அப்போ அவர் என்னை பார்த்து கேட்டார் எங்கடா போற தம்பி?  அதுக்கு நான் தனுஷ்கோடியை சுத்தி பாக்க போறேன்னு சொன்னேன் அவர்கிட்ட. தனியா வாடா போற? அப்படின்னு அவர் என்னை கேட்க... வீட்டில் ஏதாவது பிரச்சனையா? அப்படின்னு என்கிட்ட இன்னொரு கேள்வி கேட்டார். அந்த இரண்டாவது கேள்விக்கான காரணம் அப்புறம் தான் புரிஞ்சது. பல பேரு பல பிரச்சினைகளிலிருந்து விடுபட தங்களது உயிரை மாய்த்துக் கொள்ள தனுஷ்கோடியை தேர்ந்தெடுக்கறங்களாம். நானும் அவர்களில் ஒருவன் அப்படி னு அந்த போலீஸ்காரர் நினைச்சிட்டார் போல. அப்புறமா அவர்கிட்ட தெளிவா நான் பேசிக்கிலி ஒரு டிராவலர் அண்ணா. பல பயணங்கள் போயிட்டு அதைப் பற்றிய கட்டுரையை எழுதற டிராவல் ப்ளாக்கர் னு அவர்கிட்ட விளக்கி சொன்னேன். அப்புறம் அவரு என்ன பத்திரமா பார்த்து போடான்னு அட்வைஸ் பண்ணி அனுப்பி வைத்தார். 

நானும் எப்போடா தனுஷ்கோடி போய் சேருவோம் அப்படின்னு எதுவுமே தெரியாம அந்த நீளமான ஸ்ரைட்டா ஒரு ரோட்ல நடந்து போயிட்டு இருந்தேன். நான் போன பாதையில் ரெண்டு பக்கமும் காடு அதுவும் முள் காடு. அடிச்சுப் போட்டா கூட உதவிக்கு ஒருத்தருமே இல்லாத பகுதி. அப்பப்போ ஒன்னு ரெண்டு வண்டிங்க அந்த ரோட்டை கிராஸ் பண்ணி போயிட்டு இருந்துச்சு. நானும் அந்த ரோட்ல நடந்து போயிட்டு இருக்கும்போது அந்த ரோட்டோரமா தனுஷ்கோடி இத்தனை கிலோமீட்டர் னு எழுதி இருக்க ஒரு கல்லு பக்கத்துல நின்னு வழக்கம் போல ஒரு செல்பி எடுத்தேன்.
நான் நடந்து போன அந்த சாலையோடு இடது பக்கத்தில் தான் நிறைய பிரசித்தமான புனிதா தீர்த்தங்கள் காட்டுக்குள்ள இருக்கிறதா அங்கிருக்க சைன் போர்டு சொல்லிச்சு. சில மனநல பாதிக்கப்பட்டவங்க சாலை ஓரமா இருந்தாங்க. பல ஊர்கள்ல இருந்து இங்க கொண்டு வந்து விட்டுட்டு போய்டுவாங்களாம் இவங்கள.  சாலையில் போறவங்க தர தீணி பண்டங்கள் தான் அவர்களுக்கான உணவு. சரியா ஒரு ரெண்டு மூணு கிலோமீட்டர் மர நிழலால் நடந்து போன எனக்கு அடுத்தது தான் ரொம்ப சவாலா இருந்துச்சு. மரமே இல்லாத வெறிச்சோடி போன அந்த வெயில் கொளுத்திய சாலையில... எப்படா மரநிழல் கிடைக்கும்னு நான் ஏங்கி தவிச்சேன். இருந்தாலும் இதை ஆசைப்பட்டே வந்த பயணம் அப்படிங்குற காரணத்தால் , போகப் போக அந்த வெயிலும் எனக்கு பழகிடுச்சு. என் பையில் வைத்திருந்த ஒரு துண்டை எடுத்து தலையில் கட்டிக்கிட்டேன். சாலையிலேயே நடந்து போக எனக்கு கொஞ்சம் சலிப்பா தான் இருந்துச்சு. தூரத்தில தண்ணி வற்றி இப்ப காஞ்சு போய் இருக்க ஒரு பகுதியை என்னோட இடது புறத்தில் பார்த்தேன். அங்க ஒரு கண்காணிப்பு கோபுரம் தன்னந்தனியே அந்தப் பகுதியில தனியா நின்னுட்டு இருந்துச்சு. நான் என்ன நெனச்சேன்... சரி நாம கொஞ்சம் இறங்கி அந்த தண்ணி இல்லாத வத்திப் போன அந்த இடத்தில் நடந்து போலாம்னு நான் சாலையில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பிச்சேன்.




கண்ணுக்கு தொலைவில் யாரோ சில மனிதர்கள் இருக்கிற காட்சியைக் கண்டு நான் அவங்க கிட்ட போகணும்னு வேகமாக முன்னேறி நடந்து போயிட்டு இருந்தேன். நீங்க கூகுள் மேப்ல தனுஷ்கோடி போற அந்த சாலையை பார்த்தா உங்களுக்கே தெரியும். ஒரு சாலை அதோட ஒரு பக்கம் ஆக்ரோஷமாக இருக்கிற கடல், இன்னொரு பக்கம் அமைதியா இருக்கிற தேங்கிய கடல் தண்ணீர் ஏரி போல இருக்கும். நான் நடக்க நடக்க தொலைவில் என் கண்ணில் பட்ட நபர்கள் வேகமாக முன்னேறி போறத பார்த்து முடிந்தவரை அவங்ககிட்ட போகணும்னு வேகமா இன்னும் முன்னேறி போனேன். ஆனா என்னால அவங்க கிட்ட போகவே முடியல அவங்க வேகமாக முன்னேறி போயிட்டே இருந்துட்டாங்க. அரை மணி நேரத்தையும் கடந்து அந்த பாலைவனம் போன்ற திறந்தவெளியில் தனியே நடந்து போய்ட்டே இருந்தேன். சரி நாம கொஞ்சம் டேக் டைவர்ஷன் எடுத்து எனது வலது புறமாக திரும்பி தொலைவில் இருக்கிற அந்த கோதண்டராமர் கோயில் கிட்ட போலாம்னு முடிவு பண்ணி அதை நோக்கி போனேன். அந்த வற்றிப்போன பாலைவனம் போல இருந்த நிலப் பகுதியில் பல பைக்கர்ஸ் ரேஸ் பைக் ஓட்டி போன தடயங்களும் சிலர் கார் ஓட்டிட்டு போன தடயங்களும் இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. அன்னைக்கு கொஞ்சம் ஸ்பெஷலா சூரியனை சுத்தி கருப்பு நிற வளையம் ஒன்று வானத்தில் இருந்துச்சு. சிறிது நேர நடைபயணத்தில் நான் அந்த கோதண்டராமர் கோவிலை அடைந்தேன்.

இராமாயணத்தில், வீடணன் தன் சகோதரன் ராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவளை ராமரிடமே ஒப்படைக்கும்படியும் அறிவுரை கூறினார். ராவணன் அதை ஏற்க மறுத்ததுடன், வீடணனை காலால் மிதிக்கச் சென்றார் .இதனால் வெறுப்புற்ற வீடணன் ராமருக்கு உதவிசெய்வதற்காக ராமரிடம் சரணாகதி அடைந்தார். வீடணனை தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமன், இலங்கையை  வெற்றி பெறும்முன்பாகவே, இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். வீடணனுக்கு பட்டாபிஷேகம் நடந்த இடத்தில், ராமருக்கு அமைக்கப்பட்ட கோயில் கோதண்டராமர் கோயில் ஆகும். அந்தக் கோயில் அமைந்திருக்க நில அமைப்பே ரொம்ப ரம்மியமா இருக்கும். கடல் சீற்றம் அதிகமாயிருக்க காலத்திலும் மழை காலத்திலும் அந்த வற்றிப்போன பாலைவனத்தில் தண்ணீர் சூழ்ந்து அந்த தண்ணீர் காட்டுக்கு நடுவுல ஒரு தீவில்தான் இந்த கோயில் இருக்கும். அதுக்கு மெயின்ரோட்டில் இருந்து கனெக்டிங் ரோடும் ஒன்னு இருக்கு. மணிரத்தினம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் அந்த கோயிலுக்கு பக்கத்துல தான் மாதவன் வீடு இருக்கிற மாதிரி அமைச்சு இருப்பாங்க. நான் அங்க போயி முதல்ல என் தாகத்தை தீர்க்க ஒரு மாஸா பாட்டில் வாங்கி குடிச்சேன். தாகம் தீர்ந்ததும் என்னோட பயணத்தை சிறிது ஓய்வுக்குப் பிறகு அங்க இருந்து தொடர்ந்து நடக்க ஆரம்பிச்சேன்.

என்னோட பயணத்தில் பாதி தூரம் கூட கடந்து இருப்பேன்னானு எனக்கு தெரியல. ஆனா அந்த கோதண்டராமர் கோயிலில் இருந்து மெயின் ரோட்டுக்கு போற ரோடு புடிச்சு நடந்து போயிட்டே இருந்தேன். அப்போ என்னோட வலதுபுறத்தில் காய்ந்துபோன வற்றிய பாலைவனத்தில் கலர்கலரா ஏதோ செட்டு மாறி போட்டிருந்தாங்க. அது என்னனு பாக்கணும்னு நான் அதுகிட்ட போகலாம்னு நடந்து போயிட்டு இருந்தேன். நான் அதோடு அருகில் போய் பார்த்த அப்ப தான் தெரிஞ்சது கொஞ்ச நாளைக்கு முன்னாடி அங்க ஒரு சினிமா சூட்டிங் நடந்து இருக்கு. அங்க ஒரு பாட்டுக்காக போட்டு வைத்திருந்த செட்ட பிரிச்சுட்டு இருந்தாங்க. அப்பதான் அங்கே இருந்த ஒருத்தர் நடிகர் சிவகார்த்திகேயன் ஓட ஹீரோ படத்துல வர ஒரு பாட்டு ஷூட்டிங் இங்க நடந்துச்சி னு சொன்னார். நானும் அங்க கொஞ்ச நேரம் இருந்து அதை வேடிக்கை பாத்துட்டு அங்கிருந்து என் பயணத்தில் தொடர்ந்து நடந்து போயிட்டு இருந்தேன். கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கலாம் அப்படின்னு சாலையோரம் இருந்த ஒரு இடத்தில கொஞ்ச நேரம் ஒரு துண்டை விரிச்சு படுத்துட்டேன். 

அரை மணிநேர தூக்கத்திற்கு பின்பு சரி கிளம்பலாம் னு அந்த சாலையில் மீண்டும் நடக்க ஆரம்பிச்சேன் தனுஷ்கோடியை நோக்கி. மதிய வேலைக்கு மேல ஆயிடுச்சு. இன்னும் சாப்பாடு வேற சாப்பிடல. தொடர்ந்து நடக்க முடியாத நிலை. சரின்னு வழக்கம்போல தனுஷ்கோடிக்கு சீக்கிரம் போய் ஆகணும்னு லிப்ட் கேட்க சாலையில் போன எல்லா வாகனத்துக்கும் கையை போட்டேன். அப்பதான் ஒரு குட்டியானை வண்டியில எனக்கு லிப்ட் கிடைத்தது. அந்த குட்டி யானை டிரைவர் பேரு சக்திவேல் அண்ணா.
தனுஷ்கோடியில் இருக்க ஒரு கடைக்கு பொருட்களை டெலிவரி பண்றதுக்கு போயிட்டு இருந்தார். சரியா ஒரு ஐந்தாறு கிலோ மீட்டருக்கு மேல அவருடைய வண்டியில் நான் போயிருப்பேன். 


தனுஷ்கோடிக்கு முன்னாடி இருக்க ஒரு சின்ன ஊரு தான் முகுந்தராயர் சத்திரம். இந்த ஊர்ல ஒரு சின்ன துறைமுகமும் இருக்கு. சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு தனுஷ்கோடியையும் தாண்டி அரிச்சல்முனை அப்படிங்கிற பகுதி வரைக்கும் ஒரு சாலையை போட்டாங்க. இந்த சாலை திட்டம் போடறதுக்கு முன்னாடி வரைக்கும் இந்த முகுந்தராயர் சத்திரம் வரைக்கும் தான் ராமேஸ்வரத்திலிருந்து வாகனங்களில் போக முடியும். அங்கிருந்து கடல் தண்ணீர் தேங்கி இருக்கிற சின்ன ஏரி மாதிரியான நீரில் வேன்களில் தான் தனுஷ்கோடிக்கு போயிட்டு வந்துட்டு இருந்தாங்க தனுஷ்கோடியில் இன்னும் வாழ்ந்துட்டு இருக்கும் மக்களும் சுற்றுலாப் பயணிகளும். அந்த சாலை திட்டத்திற்கு அப்புறமா இப்போ எல்லாராலும் தனுஷ்கோடியையும் தாண்டி அரிச்சல்முனை வரைக்கும் எல்லா வாகனங்களையும் சுலபமாக போயிட்டு வர முடியுது. ராமேஸ்வரத்தில் இருந்து அரிச்சல்முனை வரைக்கும் அரசு பஸ் வசதி கூட இருக்கு. பல நேரங்கள்ல புழுதி காற்று அடிக்க இந்த சாலையை முழுவதும் கடல் மணல் சூழ்ந்து இருக்கிற காட்சியும் பார்க்க முடிஞ்சுச்சு. கடல் அலை ஆக்ரோஷமாக இருக்க நேரத்தில் இந்த சாலையில் தற்காலிகமாக போக்குவரத்தை தடை பண்ணிடுவாங்க பாதுகாப்பு காரணங்களுக்காக. நான் தனுஷ்கோடியை போய் ரீச் ஆன நேரம் மதியம் 2 மணி இருக்கும். 



ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ரொம்ப சுறுசுறுப்பா இயங்கிட்டு இருந்த ஒரு நகரம்... ஒரு பெரும் புயலில் அழிந்து போய் அந்த புயலில் மிஞ்சிய சில கட்டிடங்கள் நிறைந்த பகுதிகள் அந்தப் புயலோட கோரத்தாண்டவத்தை நமக்கு கண்முன்னே காட்டுது. இப்போ வாழவே தகுதி இல்லாத நகரம் னு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தாலும் இப்பவும் அங்கே பல மீனவ குடும்பங்கள் வாழ்ந்துட்டு தான் இருக்காங்க. அங்க இருக்க பசங்களுக்குக்காகவே சின்ன ஒரு பள்ளிகூடம் அங்க இருக்கு. அவங்களோட மிகப்பெரிய வருமானமே மீன் பிடிக்கிறது மற்றும் தனுஷ்கோடியை சுற்றிப்பார்க்க வர சுற்றுலாவாசிகளுக்கான கடைகளும் தான்.
நான் போய் முதல்ல போன இடம் அங்க இருக்க ஒரு சிதிலமடைந்த 300 வருடங்களுக்கு முன்னாடி கட்டப்பட்ட போர்த்துகீசியர் காலத்து சர்ச் தான். அந்த சர்ச் பவளப்பாறைகள் கொண்டு கட்டப்பட்டது. தற்போது அந்த சர்ச்சின் முகப்பு மட்டுமே அந்த சர்ச் அங்கு இருந்ததற்கான அடையாளமாக புயலின் பாதிப்பையும் கடந்து தற்போது காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. சிறிது நேரம் அந்த சர்ச்சையை சுற்றி பார்த்துவிட்டு அருகில் இருந்த ஒரு ஓலைக் கொட்டகையில் சிறிது நேரம் உறங்கி ஓய்வு எடுத்தேன். பின்பு அந்த தனுஷ்கோடியில் சிதிலமடைந்த ஒரு அந்த காலத்து மருத்துவமனையையும் பின்பு அங்கு மண்ணில் புதையுண்ட சில கட்டிடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு, அங்கே சிறு குகை போன்ற ஒரு கட்டிடம் இருப்பதின் அருகில் சென்றேன்.

அங்கே அந்த குகை போன்ற கட்டிடத்தின் உள்ளே ஒரு வயதான பெரியவர் அவரின் கடைசி நாட்களை வாழ்ந்து வருகிறார் என்பதை உள்ளே இருந்த காட்சியை பார்க்கும் போது நமக்கு புரிந்தது. அங்கு இருந்த மற்ற சிதிலமடைந்த கட்டிடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு அந்த சாலையின் மறுபக்கத்தில் இருக்கும் இன்னொரு பகுதிக்கு நடந்தே சென்றேன். 

தனுஷ்கோடியில் ரயில் நிலையம் இருந்ததுக்கான அடையாளம் அந்த ஒரு கட்டிடம் மட்டுமே. அந்த கட்டிடம் மட்டுமே அங்கே புயலின் பாதிப்பையும் தாண்டி நின்றுகொண்டிருந்தது. சென்னையில் இருந்து போட் மெயில் என்னும் ரயிலில் தனுஷ்கோடி வரை பயணித்து பின்பு இங்கிருந்து படகில் தலைமன்னாருக்கு சென்று அங்கு இருந்து கொழும்புக்கு செல்லும் பலர் இந்த தனுஷ்கோடி ரயில் நிலையத்திற்கு தான் வந்து இறங்குவார்கள். அப்படிப்பட்ட ஒரு சிறப்பு வாய்ந்த ஒரு ரயில் நிலையம் இருந்ததற்கான தடமே இல்லாமல் புயல் தன் வாயில் போட்டுக்கொண்டது. இந்த ரயில் நிலையத்திற்கு தான் புயல் தனுஷ்கோடியை தாக்கிய அன்று சற்று நேரத்தில் நடக்கப்போகும் பேராபத்தை பற்றி உணராமல் வந்து கொண்டிருந்தது 110 பயணிகளுடன். அந்த ரயிலும் அப்படியே கடலில் மூழ்கி ரயிலில் இருந்த அத்தனை பேரும் மாண்டு போனார்கள். அங்கே அந்த ரயில் நிலையம் இருந்த இடத்தின் அருகில் சில இடங்களை நான் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே தண்டவாளங்கள் இருந்ததற்கான தடயங்களை என்னால் காண முடிந்தது. பின்பு அந்த ரயில் நிலையத்தில் சிறிது நேரம் என் நேரத்தை கழித்துவிட்டு தொலைவில் தெரிந்த ஒரு குக்கிராமத்திற்கு சேறும் சகதியுமான ஒரு பாதையில் நடந்தே சென்றேன். தனுஷ்கோடியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் தனியாக ஒரு குடியிருப்பு. அந்த கிராமத்தின் பக்கத்தில் இருந்த படகுகள் அது மீனவர்களின் குடியிருப்பு என்பதை நமக்கு சொல்லியது.

முட்டிக்கும் கீழான அளவில் தண்ணீர் தேங்கியிருந்த அந்த நீர்ப்பரப்பில் நான் அங்கு நடந்தே சென்று சேர்ந்தேன். அங்கே ஒரு மீனவர் மீன் பிடித்துக் கொண்டு கரை திரும்பிய காட்சியும் அந்த மீன்களை கரையில் அருகில் இருந்து அவரின் மனைவி  இறக்கிக் கொண்டிருந்த காட்சியும்  அவரின் சிறு குழந்தை அக்கரையில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த காட்சியும் என்னை அந்த மீனவரின் படகு அருகில் செல்ல தூண்டியது. அவர் பிடித்து வைத்திருந்த மீனை என்னிடம் காட்டினார்.
அதை புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கே சில நிமிடங்களைக் கழித்துவிட்டு சூரியன் மறையத் தொடங்கிய காரணத்தால் அங்கிருந்து அரிச்சல்முனை நோக்கி கடற்கரையோரமாக நடக்க ஆரம்பித்தேன். 

தனுஷ்கோடியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பது தான் அரிச்சல்முனை. இதுதான் இந்தியாவின் நிலப்பகுதியின் ஒரு கடைசி எல்லைமுனை. இலங்கை இங்கிருந்து வெறும் 15 கிலோ மீட்டர்தான். அந்த கடற்கரை ரொம்ப ரம்மியமாகவும் ஆனால் மிகவும் ஆக்ரோஷமாக சீறிக்கொண்டு அலைகளைக் கொண்டதாக இருந்தது. அங்கே சென்று சிறிது நேரம் கடற்கரையில் கால் நனைத்து விட்டு ராமேஸ்வரம் செல்லும் கடைசி பஸ்ஸிற்காக காத்திருந்தேன். எனக்கு ஒரு ஆச்சரியம் நான் பயன்படுத்தும் ஏர்டெல் நெட்வொர்க்கில் "வெல்கம் டு ஸ்ரீலங்கா" என்று குறுஞ்செய்தி வந்தது. சூரியன் இன்னும் சற்று நேரத்தில் மறைந்துவிடும் சூழ்நிலையில் ராமேஸ்வரம் செல்லும் கடைசி பேருந்தும் அரிச்சல்முனை வந்தடைந்தது. நான் தனுஷ்கோடியை முற்றிலுமாக சுற்றி பார்த்துவிட்டு அந்த பேருந்தில் அரிச்சல் முனையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி என் பயணத்தை தொடங்கினேன். கடந்த முறை இந்த இடத்திற்கு வந்த பொழுது ஒரு முழு தினத்தையும் இந்த தனுஷ்கோடியையும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் சிதிலமடைந்த கட்டிடங்களையும் பார்க்க வேண்டும் என்ற ஒரே ஆசையில்தான் இந்த பயணத்தை தொடங்கினேன். அந்த ஆசை நிறைவேறிய திருப்தியுடன் மறக்க முடியாத நினைவுகளுடன் அந்த இடத்தில் இருந்து பிரியா விடை பெற்றேன். 


தனுஷ்கோடி பயணத்தை முடித்துக்கொண்டு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தேன் அந்த இரவில். ராமேஸ்வரத்தில் வயிறு நிறைய இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு கன்னியாகுமரி செல்லும் அதிவிரைவு வண்டியில் குமரி நோக்கி என் பயணம் தொடர்ந்தது. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நீங்கள் எல்லோரும் ஒருமுறையாவது வாழ்க்கையில் அந்த அழிந்துபோன நகரமான தனுஷ்கோடியை பார்த்துவிட்டு வாருங்கள். மீண்டும் சென்னையில் இருந்து பைக்கில் தனுஷ்கோடிக்கு போக வேண்டும் என்ற மற்றொரு ஆசையும் எனக்கு உண்டு. 

அதுவும் கூடிய விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் உங்கள் தினேஷ்குமார்.

இந்த பயணம் போய் வந்த சில நாட்களிலேயே என் மொபைல் தொலைந்த காரணத்தால் புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் பேக்அப் பண்ணவில்லை. இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இருந்த புகைப்படங்கள் வீடியோக்களே இதில் இணைக்கப்பட்டுள்ளது.

பயணங்கள் முடிவதில்லை தொடரும். 

- தினேஷ் குமார் (எ) SDK







Monday, 29 June 2020

முதன் முதலாக - மை ஃபர்ஸ்ட் சோலோ ட்ராவல்


ஆடியோ வடிவில் இந்த கதையை கேட்க கீழே இருக்க லிங்க் க்ளிக் பண்ணுங்க

https://anchor.fm/dineshsdkkumar/episodes/-------httpdineshsdkkumar-blogspot-com202006blog-post-html-eg30rl


வாழ்க்கையில் அவன் போன முதல் சோலோ டிரிப் அது தான். கையில வீட்டுல கொடுத்த வெறும் 900 ரூபாய் எடுத்துகிட்டு, எந்த ப்ளானும் இல்லாம, ஐந்து நாள் கோவை, வால்பாறை, சோலையார், அத்திரப்பள்ளி னு அவன் தமிழ்நாட்ல இருந்து கேரளா போய்ட்டு, வீட்டுக்கு வரும் போது மிச்சம் கையில 80 ரூபாய் இருந்தது. அந்த டிரிப் ல அவன் சந்திச்சி மனிதர்கள் மற்றும் அவன் போன இடங்கள் இப்படி அவனோட முதன் முதலா போன சோலோ டிராவல் கதை தான் இது.

சனிக்கிழமை , இரவு 10 மணி.

ஸ்கூல் ப்ரெண்ட் கார்த்திக் வீட்டுக்கு போய்ட்டு... ஒரு கி.மீ. தூரம் இருக்க எங்க வீட்டுக்கு நடந்து வந்துட்டு இருக்கும் போதே முடிவு பண்ணிட்டேன்... கண்டிப்பா தனியா டிரிப் கிளம்பணும் உடனே அப்படி னு. வீட்டுக்கு வந்து தூங்கிட்டு இருந்த அம்மாகிட்ட டிரிப் போக காசு வேணும் கொடுங்கனு கேட்டதுக்கு... டேய் !காலையில போடா ! இப்போ இருட்டுச்சி ! அப்படி சொல்ல, நான் விடாபிடியா இப்போ தான் போவேன்  னு அடம்பிடிக்க... கையில வெறும் 400 ரூபாய் தான் இருக்குடா ! ஏ டி எம் ல போய் இப்போ எடுக்க கூட முடியாது னு ... நைட் ஷிப்ட் வேலையில் இருந்த எங்க அண்ணா க்கு போன் பண்ணி அவன் நண்பன் கிட்ட 500 வாங்கிக்க சொன்னான் னு அம்மா சொன்னாங்க. என் அண்ணாவோட நண்பன் வீட்டுக்கு போய் காசு வாங்கிட்டு... அம்மா க்கு டாடா சொல்லிட்டு... அந்த இரவில் கொஞ்சம் துணிய பேக் ல எடுத்துக்கிட்டு கிளம்பிட்டேன் டிரிப்க்கு கையில வெறும் 900 வெச்சிக்கிட்டு. 

திடீர் னு இப்படி பயணம் கிளம்ப என்ன காரணமா இருக்கும் ? னு நீங்க கேட்கறது எனக்கு புரியுது.

என்னுடைய யூ ஜி கோர்ஸ் ஃபைனல் செமஸ்டர் முடிஞ்சதும், வழக்கம் போல கோடை கால விடுமுறை. என் கூட படிச்ச நண்பர்கள் கூட ஒரு டிரிப் போக ப்ளான் பண்ணி இருந்தோம்.  ஆனா எங்க கூட  டிரிப் ப்ளான் பண்ண சிலர், தனியா பொய் சொல்லிட்டு டிரிப் போனது தான் நான் தனியா டிரிப் போலாம் னு முடிவு பண்ண காரணம். அவங்க டிரிப் போக ப்ளான் பண்ணது கோயம்புதூர் ல இருக்க என் நண்பன் வீடு. நானும் அங்க போய் அவங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துட்டு, நான் மட்டும் தனியா ஒரு இடத்துக்கு போக ப்ளான் பண்ணேன். 

பள்ளி நாட்களில் என்னுடன் படிச்ச க்ளாஸ்மேட் நிவேதா என்னோட க்ளோஸ் ப்ரெண்ட். அவங்க அப்பா ராஜா அங்கிள் ரொம்ப ஜாலி டைப். அவரோட இளமை பருவம் எல்லாமே... மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்க வால்பாறை டீ எஸ்டேட் ல தான் வாழ்ந்து இருக்கார் மனுசன். அடிக்கடி நாங்க கதை பேசும் போது... என்னையும் கூப்டுவார் வாடா வால்பாறை ஒருதடவை போலாம் னு... அப்படிதான் என்னையும் அந்த சம்மர் ல ஒரு நிகழ்ச்சிக்கு வால்பாறை போக போறேன் வரதுனா கூட வாடா னு கூப்பிட்டார். 

அந்த இரவில் திடீர் னு நான் கிளம்பி போகணும் முடிவு பண்ணது வால்பாறை தான். கோயம்புத்தூர் போய், என் நண்பர்களுக்கு சர்ப்ரைஸ் பண்ணிட்டு... அப்படியே பொள்ளாச்சி வழியா வால்பாறை போகணும் இதன் என் ப்ளான். ஆனா நான் வால்பாறை வர விஷயம் ஒருநாள் முன்னாடியே அந்த ஊருக்கு கிளம்பி போன ராஜா அங்கிள் க்கே தெரியாது. வால்பாறை போய் பார்த்துக்கலாம் னு ஏதோ நம்பிக்கையில் கிளம்பிட்டேன். வீட்டில் இருந்து ஒரு கி.மீ தூரம் நடந்து வந்து ஒரு ஷேர் ஆட்டோல ஏறி தாம்பரம் வந்தேன். அங்க இருந்து சென்னை பார்க் ஸ்டேஷன் போய் சென்னை சென்ட்ரல் ல கோவை போற டிரையின் ல போக முடிவு பண்ணேன். தாம்பரத்துலயே கோவைக்கு டிக்கெட் எடுத்துகிட்டேன். நான் சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்... அதாங்க இன்றைய புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமசந்திரன் மத்திய ரயில் நிலையம் ல என்னுடைய டிரையின் க்கு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். 

சன்டே, நள்ளிரவு 12.30 மணி.

நான் கோவை போக எந்த டிரையின் ல இருக்குனு ரயில்வே டிஜிட்டல் போர்ட்ல பார்த்தேன். கோவை போற ட்ரையின்கள் ல ஆலப்புழா போற டிரையின் தான் முதல போகுதுனு அந்த ட்ரையின்க்கு வெயிட் பண்ணேன். ட்ரையின் வர காலதாமதம் னு அறிவிப்பு வர நான் ஒரு காபி குடிக்க கடை தேடி போனேன். ரயில் பயணங்கள் ல அந்த பத்து ரூபாய் ரயில் டீ காபி தவிர்க்க முடியாதது. எப்பவும் போல படிக்க ஆனந்த விகடன் வாங்கி வெச்சிக்கிட்டேன். டிரையின் வரத்துக்குள்ள மொபைல் சார்ஜ் போடலாம் னு ப்ளக் பாயிண்ட் தேடி போய் சார்ஜ் போட்டுட்டு வெயிட் பண்ணேன். நேரம் ஆக ஆக கோவை போற ட்ரையின் எல்லாம் தாமதம் னு அறிவிப்பு வர கொஞ்சம் கடுப்பாகி நெக்ஸ்ட் என்ன ட்ரையின் கிளம்புதே,  அதுல கிளம்பலாம் னு மதுரை போற டேக்ரடூன் மதுரை எக்ஸ்பிரஸ் ல ஏறிட்டேன். மணி சரியா அதிகாலை மூணு இருக்கும்.
ட்ரையின்ல லைட் அ தூங்கிட்டேன். காலையில நான் முழிச்சி பார்த்த அப்போ ஈரோடு வந்து இருந்துச்சி அந்த ரயில். அந்த ஸ்டேஷன் ல இறங்கிட்டேன். ஏன்னா ! நான் போக வேண்டியது கோவை. நான் வந்த அந்த ரயில் ஈரோடு ல இருந்து, வேற வழியா திரும்பி மதுரை போற ட்ரையின். சரி ! நெக்ஸ்ட் ட்ரையின் கோயம்புத்தூர் க்கு எப்போ னு ஸ்டேஷன் ல கேட்டுட்டு நான் அந்த ஸ்டேஷன் லயே இருந்த பார்த்ரூம் போய் கொஞ்சம் ரிப்ஃரெஷ் ஆயிட்டு... ஸ்டேஷன் வெளியே இருக்க ஹோட்டல் ல காலை டிபன் சாப்பிட்டு முடிஞ்சேன். 

சன்டே, காலை பத்து மணி.

ஈரோடு ரயில் நிலையத்தில் வந்த ஆலப்புழா விரைவு வண்டியில் ஏறி கோயம்புத்தூர் செல்ல அன்ரிசர்வ்டு கோச்ல ஏறினேன். பெரும்பாலும் எனக்கு பகல் ஏற பயணங்களில் படிக்கட்டு பயணம் தான் இஷ்டம். நான் படிக்கட்டில் உட்கார்ந்து வருகையில் அந்த அண்ணாவிடம் பேச்சு கொடுத்து பேசி கொண்டே வந்தேன். அவர் பெயர் ஜெயசுந்தரம். கோவைக்காரர். என் பயணத்திட்டத்தை கேட்டவர்... அவரின் அனுபவங்கள் மூலம் எனக்கு பல தகவல்களை பகிர்ந்து ... அவை எனக்கு பயணத்தில் பயன்படும் என சொல்லி கொண்டே வந்தார். அவருடன் பேசிக்கொண்டே கோவை வந்து சேர்ந்தேன். 

கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ல இருந்து பஸ் பிடிச்சி உக்கடம் பஸ் ஸ்டான்ட் போய், அங்க இருந்து பொள்ளாச்சி போற பஸ் ல ஏறி என் நண்பன் வீடு இருக்கும் மலுமிச்சம்பட்டியை அடுத்த ஒத்தகல் மண்டபம் போய் என் நண்பன் வீட்டுக்கு போனேன். அங்க போய் என் ப்ரெண்ட்ஸ்க்கு சர்ப்ரைஸ் தந்துட்டு நாம வால்பாறை கிளம்பலாம் னு பார்த்த எனக்கு ஷாக்கிங் சர்பிரைஸ்.
என் நண்பனுக்கு சிக்கன் ஃபக்ஸ் வந்து இருந்ததால அவங்க ப்ளான் ல சேஞ்ச் ஆயிடுச்சி. சரி அவங்க வீட்ல லஞ்ச் சாப்பிட்டு... கொஞ்ச நேர அவங்க வீட்ல இருந்தவங்க கூட பேசிட்டு... வால்பாறை கிளம்ப தயார் ஆனேன். ஏன்னா ! இருட்டறதுக்குள்ள நான் வால்பாறை போகணும். அங்க போய் ராஜா அங்கிள் எங்க இருக்கார் னு தேடணும்... அதனால அங்க இருந்து சீக்கிரம் கிளம்பிட்டேன். என் நண்பனின் தந்தை என்னை பஸ் ஸ்டான்ட் வரை பைக் ல கூட்டிட்டு வந்து இறக்கி விட்டு வழி அனுப்பி வைத்தார். நான் கிணத்துகடவு ல இருந்து பழனி போற பஸ் ல ஏறி பொள்ளாச்சி போனேன்.

தமிழ்நாட்ல அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஸ்டிரைக் பற்றி பலர் செய்திகள்ல மூலமா கேள்விப்பட்டு இருப்பிங்க. சன்டே நடக்குற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிஞ்சா, மன்டே ல இருந்து ஸ்டிரைக் னு நியூஸ் ல படிச்சேன். நான் வால்பாறை போக என் ப்ரெண்ட் வீட்ல இருந்து கிளம்புனது சன்டே ஈவ்னிங். அதுக்குள்ள பேச்சுவார்த்தை தோல்வி னு நியூஸ் ஸ்பிரேட் ஆக... ஒருநாள் முன்னாடியே கோவை சுற்றுவட்டாரத்துல பஸ் லா ஸ்டாப் பண்ண ஆரம்பிச்சாங்க. எப்படியாவது வால்பாறை போய் ஆகணும் னு பொள்ளாச்சி பஸ் ஸ்டான்ட் ல... வால்பாறை பஸ்க்கு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ஏன்னா வால்பாறைக்கு தனியார் பேருந்துகள் இல்ல. ஒன்லி கவர்மெண்ட் பஸ் தான். ஏன்னா அந்த மலை பாதை அப்படிப்பட்டது னு சொன்னாங்க. 

மதுரையில் இருந்து வால்பாறை நோக்கி போற பஸ் பொள்ளாச்சி பஸ் ஸ்டான்ட் உள்ள என்டர் ஆனதும் பெருங்கூட்டம் பஸ்ல ஏற முண்டியடிச்சாங்க. நானும் எப்படியே பஸ் ல ஏறி முன் சீட்ல உட்கார போனா, அங்க உட்கார்ந்து இருந்தவர் பெண்களுக்கு சீட் கொடுப்பா, நீ உட்காராதனு ! சொல்ல கடுப்பாகி டிரைவர் பக்கத்துலயே நின்னுகிட்டேன். என்னை உட்கார விடாதவர் சொன்னார் நெக்ஸ்ட் பஸ் ல ஏறிக்கே டா ! எதுக்கு நின்னுகிட்டு வரனு ! நா அவர் பேச்ச கேட்கமா நின்னுட்டே வந்தேன். அந்த பஸ் வேகமா ஸ்டாட் ஆகி வால்பாறை நோக்கி போக என் பயணம் ஜம்முனு ஸ்டாட் ஆச்சு. 

வால்பாறை - தமிழ்நாட்லயே அதிக அளவு மழை பொழிவு இருக்க மலை பிரதேசம். எப்பவுமே குளு குளு னு இருக்க ஹில் ஸ்டேஷன். ஏன்னா எப்பவுமே இங்க மழை பொழிஞ்சிட்டே இருக்கும்... அதனால தான் தென்னிந்தியாவின் சிரபுஞ்சி னு இந்த ஊருக்கு நிக் நேம். சிறுத்தைகள் நடமாட்டம் இங்க சர்வசாதாரணம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை டீ எஸ்டேட்கள் சூழப்பட்ட ஏரியா. இந்தியாவிலேயே சாலை பயணங்களுக்கு மிகவும் சிறந்த சாலைகள் பட்டியலில் பொள்ளாச்சி - வால்பாறை ரோடு ரூட் தான் டாப். 40 கொண்டை ஊசி வளைவு கடந்து தான் மலை ஏறி போக முடியும். 

நான் போன பேருந்தில் என்னுடைய ஆல்டைம் பேவரைட் சீட் ஆன... டிரைவருக்கு பக்கத்து ல இருக்க சிங்கிள் சீட் ல உட்கார்ந்து இருந்த நபர்... வால்பாறை மலை மேலே ஏற ஸ்டாட் ஆகுறதுக்கு முன்னாடி இருக்க ஆழியார் டேம் ல இறங்கிட்டு... அந்த சீட்ட எனக்கு தந்துட்டு போனார். பஸ் மலை ஏறுறதுக்கு முன்னாடி டேம் முன்னாடி இருக்க, ஹோட்டல் ல ஸ்மால் டீ ப்ரேக்.
நானும் நல்ல ஒரு டீ யும் பஜ்ஜியும் சாப்பிட்டு என் சீட்ல போய் உட்கார்ந்துட்டேன். சிறிது நேரத்துல பஸ் கிளம்பி மலை பாதையை அடைந்துச்சி. ஒவ்வொரு குண்டூசி வளைவுகள் ல பேருந்து திரும்பும் போதும் பக்கு பக்கு னு திரில்லிங் அனுபவமா இருந்துச்சி... என்னா என் சீட் இருந்த இடம் அப்படி. மலை பாதையில் இருந்து பார்க்கையில் தொலைவில் ஆழியார் அணையின் காட்சியும், சூரியன் மறையும் காட்சியும் என்னை ஆச்சரியப்படுத்தியது. பல பைக் ரைடர்ஸ் ஒண்ணு சேர்ந்து கும்பலாக எங்கள் பஸ்ஸை டியூக் & ராயல் என்ஃபீல்ட் பைக்ல முந்தி போன காட்சியை பார்த்து அடுத்த தடவை இந்த ரூட்ல பைக் ல நாம வரணும் னு ஆசை வந்துச்சி. 

அரசு பேருந்து ஓட்டுனருக்கு இந்த மலை பாதையில பஸ் ஓட்டுறது அனுபவத்துல அசால்ட்டா இருக்கு. ஆனா முதல் டைம் இந்த சாலையில் வாகனம் ஒட்டுறவங்களுக்கு ரொம்ப கஷ்டம். அப்போ தான் அந்த பாதையிலயே படுபயங்கரமான கொண்டை ஊசி வளைவுல பஸ் அ பொறுமையா திருப்பி ஓட்டிட்டே டிரைவர் சொன்னார்... பல வருஷத்துக்கு இந்த டார்னிங் பாயிண்ட் ல அப்படியே ஒரு பஸ் தலைகுப்புற விழுந்துச்சி னு சொல்லி பயத்த கொடுத்தார். எப்படியே பஸ் 40 கொண்டை ஊசி வளைவுகள் கடந்து இருள் சூழ தொடங்குற வேளையில் வேகமா போய்ட்டு இருந்துச்சி. என் கண் முன்னே பனி படர்ந்து சுற்றிலும் தேயிலை தோட்டங்கள் நிறைந்து இருந்துச்சி. சரியா இரவு 7 மணிக்கு வால்பாறை பஸ் ஸ்டான்ட் ல நான் இறங்கினேன்.

பஸ் ல வரும் போது தான் தெரியும் பொள்ளாச்சி டூ வால்பாறை க்கு நான் வந்த பஸ் தான் லாஸ்ட் பஸ். திங்கட்கிழமை ஸ்டிரைக் தொடங்குதுனு எல்லாம் பஸ் ஸும் அந்தந்த டிப்போல ஆல்ட். எப்படியோ வால்பாறை வந்தாச்சி. இப்போ ராஜா அங்கிள் அ தேடணும். அவர் என்கூட பேசும் போது அவர் தங்கி இருந்த எஸ்டேட் முடீஸ் அப்படிங்குற ஊர்ல இருக்குனு சொன்னது நியாபகத்துல... அந்த ஊர் போற பஸ் ல ஏறிட்டேன். எப்படியும் அங்க தான இருக்க போறார் அப்படிங்குற நம்பிக்கையில. பஸ் ல ஏறி டிக்கெட் எடுக்க ஊர் பேர் சொன்னதும் ரெண்டு பேர் சொல்லி அதுல எதுனு கேட்க... குழப்பத்துல ராஜா அங்கிள் க்கு கால் பண்ணி கேட்டேன். அவர் அடேய் ! நான் வால்பாறையில் தான் இருக்கேன் கல்யாணத்துல னு சொல்ல... நான் உடனே பஸ் ல இருந்து இறங்கி அவர் சொன்ன சர்ச்  தேடி போனேன். அந்த சர்ச் நான் முதல வந்து இறங்குன பஸ் ஸ்டான்ட் ஆப்போஸிட் ல இருந்துச்சி. ஒரு வழியா அவர கண்டுபிடிச்சி அந்த கல்யாண நடக்குற இடத்துக்கு போனேன். என்னடா எதுவுமே சொல்லாம வந்துட்ட னு கேட்டு... சரி கல்யாணத்துல சாப்பிட்டு வெயிட் பண்ணுடா... நாம கொஞ்ச நேரம் கழிச்சி இங்க இருந்து நைட் ஸ்டே பண்ண மூடிஸ் எஸ்டேட் போலாம் னு சொன்னதால, நான் சாப்பிட்டுட்டு அவருக்காக வெயிட் பண்ணேன். ஒரு வழியா அவர் அவரோட சொந்தகாரங்க மற்றும் நண்பர்கள் கூட பேசிட்டு நாங்க எஸ்டேட் போக கார்ல கிளம்பினோம். இரவு 10 மணி க்கு எஸ்டேட்கக்கு போய் அங்க இருக்க எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு ல இருக்க ஒரு வீட்டுல நைட் ஸ்டே பண்ணோம்.

திங்கட்கிழமை காலை 7 மணி.
காலையில் எழுந்ததும் குளித்து முடித்து விட்டு... நாங்க இருந்த டீ எஸ்டேட் ல இருக்க தேயிலை மலைகள் ல ஒரு சின்ன விசிட் போய்ட்டு... அங்க பல கோணங்கள் ல நின்னு போட்டோஸ் வீடியோஸ் எடுத்துட்டு மீண்டும் நாங்க தங்கி இருந்த குடியிருப்புக்கு வந்தோம். அங்க இருந்து மீண்டும் வால்பாறை நோக்கி ஆல்ரெடி அரெஞ்ச் பண்ணி இருந்த வேன் ல கல்யாணத்துக்கு போனோம். அங்க போய் காலை டிபன் முடிச்சிட்டு என்ன பண்ணலாம் இன்னைக்கு னு யோசிக்கும் போது... தான் நான் இருந்த இடத்துல இருந்து எங்கேயும் போக முடியாது னு தெரிஞ்சிது ஏன்னா பஸ் ஸ்டிரைக். அப்போ ராஜா அங்கிள் சொன்னார்... சும்மா அப்படியே எங்கயாவது போய் சுத்தி பார்த்துட்டு மதியத்துக்குள்ள இங்க வாடா சாப்பிட னு சொல்ல... நான் எங்க போறது னு யோசிட்டே வால்பாறை பக்கத்துல இருக்க சோலையார் ல இருக்க என் ஜூனியர் மற்றும் சேலையூரியன் ஷேரன் சன்னி தாமஸ் க்கு கால் பண்ணேன். அவன் சில இடங்களை எனக்கு ஷஜஸ்ட் பண்ணான். சரி அதுல எது கிட்ட இருக்கு னு பார்த்து... அங்க நான் பொடி நடையா நடந்தே அங்க போலாம் னு கூகுள் மேப் நம்பி நடந்தே போனேன். 

சிறுகுன்றா கூழாங்கல் ஆறு. வால்பாறை ல இருந்து சின்னக்கல்லாறு போற வழியில 3 கி.மீ தொலைவுல இருக்க இடம். என் ஜூனியர் சொன்னான் னு இந்த இடத்துக்கு நான் நடந்தே போய்ட்டு இருந்தேன். இருபுறமும் தேயிலை தோட்டம் அதற்கு நடுவே ஆள் நடமாட்டமில்லாத சாலை னு நான் போன பாதை அப்படி ஒரு கொள்ளை அழகோடு இருந்துச்சி. சிறுத்தைகள் நடமாட்ட பீதி ஒரு பக்கம் இருக்க ... எல்லாத்தையும் தாண்டி நான் எதை பற்றியும் கவலை இல்லாமல் கூழாங்கல் ஆற்றை நோக்கி போய்டே இருந்தேன். அப்போ ரோட்ல ஒரு அண்ணா பைக்ல வர... வழக்கம் போல லிப்ட் கேட்டேன். உடனே அந்த அண்ணா லிப்ட் கொடுத்து என்னை கூழாங்கல் ஆற்றுக்கிட்ட கொண்டு போய் இறக்க விட்டார். இடப்புற தேயிலை தோட்டத்துல இருந்து வலதுப்புறமா ஒரு ஆற்றுபாலம் வழியா ஆற்றுல தண்ணி ஆர்ப்பரிச்சு ஓட வலதுப்புறமா இறங்கி ஆற்றுல கொஞ்ச நேரம் கால் நனைச்சிட்டு ரிலாக்ஸ் பண்ணேன். அந்த ரிவர் ஃபுல்லா கூழாங்கல் நிரம்பி இருந்துச்சி... அதோட பெயருக்கு ஏற்றார் போல . அங்கேயே ஒரு குளியல் போட ஆசை , ஆனா மாற்றிக்க துணி இல்லனு அந்த ஆசையை தள்ளி வெச்சிட்டு கொஞ்ச நேரத்துல அங்க இருந்து கிளம்பலாம் னு யோசிக்கும் போது... அந்த ஆற்றுபாலத்து க்கு எதிர் திசையில் ஆற்றுநீர் வெள்ளி அருவி போல பாறைகள் ல வழிந்து வர காட்சி என்னை அங்க போக வெச்சிது னு சொல்லலாம். அங்க போய் போட்டோ எடுத்துட்டு இருக்கும் போது... அந்த ஆற்றோர ரோட்ல போன ஒரு குட்டியானை வண்டி டிரைவர்... தம்பி !அங்க இருந்து வந்துட்டுங்க. அங்க ஆற்றுல சுழல் இருக்கும். அது ரொம்ப ஆபத்து னு சொல்ல நான் அங்க இருந்து உடனே கிளம்பிட்டேன். அந்த பிரிட்ஜ் கிட்ட வேர்க்கடலையை தள்ளு வண்டில வெச்சி வித்துட்டு இருந்த அண்ணா கிட்ட வேர்கடலை வாங்கி சாப்பிடும் போது அவர்ட்ட நான் கேட்டேன். இங்க சிறுத்தை ல இருக்கா அண்ணா னு ? அதுக்கு அவர் எங்க வீடு டவுன்க்குள்ள தான் இருக்கு டா தம்பி ! எங்க வீட்டுக்கு பின்னாடி இருக்க பள்ளத்தாக்குல, காலையில நாலு சிறுத்தைக்குட்டி விளையாடிட்டு இருந்துச்சி னு... அசால்ட்டா ஏதோ நாய் பூனை குட்டி விளையாடிட்டு இருந்த மாறி சொன்னத கேட்கும் போது அந்த ஊர்க்காரங்களுக்கு சிறுத்தையை பார்க்கறது எவ்வளவு சாதாரண விஷயம் னு புரிஞ்சிது. 


அப்புறம் அங்க இருந்து கிளம்பி மறுபடியும் நடந்தே வால்பாறை டவுன் நோக்கி போனேன். சிறிது நேரம் அந்த தேயிலை காடுகளுக்கு உள்ளே போய் புது ரூட்ல போலாம் னு போய்ட்டே இருந்தேன். ஒரு வேளை யாராவது நம்மல யார்டா நீ ? இங்க என்ன பண்ற னு கேட்டா ? வழி தவறி வந்துட்டேன் னு சொல்லிகலாம் னு நான் தனியே வழி தெரியாம அந்த தேயிலை மலைகள் ல நடந்து போனேன். தொலைவில் சாலை தெரிய, அங்க போய் மறுபடியும் லிப்ட் கேட்டு வால்பாறை ல நான் போக வேண்டிய கல்யாணம் நடக்குற சர்ச்க்கு  ஒருவழியா போய் சேர்ந்தேன். அங்க போய் மதிய சாப்பாடு சாப்பிட்டு, சிறிது நேரம் அங்கேயே தனியே டைம்பாஸ் பண்ணிட்டு இருந்தேன்.

என் ஜூனியர் ஷேரன் சன்னி தாமஸ் என்ன பார்க்க வால்பாறை வரேன் னு சொன்னதால... நான் வால்பாறை லயே இருக்க முடிவு பண்ணேன் அவன் வர வரைக்கும். அப்போ ராஜா அங்கிள் நான் மூடிஸ் எஸ்டேட் கிளம்புறேன் னு சொல்ல... நான் நண்பர் வர சேதியை சொல்லி நான் அவன பார்த்துட்டு வரேன் னு சொன்னதால... அவர் நண்பர்களோடு கிளம்பி எஸ்டேட் க்கு போய்ட்டார். மதியம் லைட்டா வெயில் வாட்ட நான் ஜூனியர் வர வரைக்கும் எங்கேயாவது போலாம் னு வால்பாறை டவுன்ல இருந்து பச்சை மலை எஸ்டேட் போற பாதையில ரெண்டு கி.மீ நடந்து போய் உயர்ந்த தேயிலை மலைகளை ஆச்சரியமா பார்த்துட்டு இருக்கும் போது... ஒரு மலையின் உச்சியில் ஒரு ஷேட் தெரிய அங்க இருந்து ஒரு சின்ன பொண்ணு கீழே இறங்கி வந்தா,  அவக்கிட்ட மேலே என்ன ஷேட் அது ? னு கேட்க அந்த பொண்ணு ஏதோ சொல்ல... அது எனக்கு புரியாம நான் அங்க என்ன இருக்குனு பார்ப்போம் னு அந்த மலை மேலே ஏறி போனேன். 
எப்பவுமே ஒரு ஆர்வம் ! ஆவல் ! ஒரு விஷயத்துல நமக்கு இருந்தா, எப்படி அதை அடைந்தோம் னு யோசிக்கவே டைம் இல்லாத அளவுக்கு ஒரு ஊந்து சக்தி, நம்மல ரொம்ப சீக்கிரம் அந்த இலக்குல நம்மல கொண்டு போய்ட்டும். அது போல தான் நான் அந்த தேயிலை மலை உச்சிக்கு போய்... அந்த மலை க்கு அந்த பக்கம் என்ன இருக்குனு பார்த்தா ... கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேயிலை மலைகளும் அதுல தேயிலை பறிக்குற தொழிலாளிகளும் இருந்தாங்க. அவங்க கூட கொஞ்ச நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு, அவங்கள பத்தியும் அவங்க வாழ்க்கை பற்றியும் கேட்டுட்டு, அந்த மலைகள் ஓட அழகை முழுசா இல்லனாலும் என்னால முடிஞ்ச அளவு மொபைல் ல கேப்சர் பண்ணிட்டு... மலையில இருந்து இறங்கி நான் வால்பாறை டவுன் நோக்கி நடந்து போனேன். மாலை நெருங்கிட்டு இருக்கும் போது என் ஜூனியர் ஷேரன் சன்னி தாமஸ் அங்க வந்தான். அவன் கூட பல கதைகள் பேசிட்டு வால்பாறை பற்றியும், அவன் ஊர் சோலையார் பற்றியும் கேட்டுட்டு இருக்கும் போது அவன் கேட்டான். நெக்ஸ்ட் என்ன ப்ளான் னு ? அதுக்கு நான் சொன்னேன்... உண்மையா ஒரு ப்ளான் னும் இல்ல. இப்போ இங்க இருந்து கீழே பொள்ளாச்சி போக பஸ்ஸூம் இல்ல ஸ்டிரைக் காரணத்தால னு சொன்னதும் அவன் சொன்னான்.... அப்போ எங்க வீட்டுக்கு வாங்க அண்ணா னுசொன்னான். நானும் சிறிதும் நேர யோசனைக்கு பிறகு வர ஓகே சொல்லிட்டேன். எங்க ஏரியா ல இன்னைக்கு பவர் கட்... டிரன்ஸ்பர்மர் ஒண்ணு எரிஞ்சிடுச்சி. அதனால நாளைக்கு வாங்க னு சொன்னான் தம்பி. நானும் அவனும் கொஞ்ச நேரம் அந்த டவுன்ல பேசிட்டே நடந்து போய் பஸ் ஸ்டான்ட்க்கு போனோம். மாலை நெருங்க இருட்றத்துக்குள்ள சோலையார் போகணும் னு ஜூனியர் தம்பி அவன் ஊருக்கு போற பஸ்ல கிளம்பி போக நானும் ராஜா அங்கிள் இருக்க எஸ்டேட் க்கு பஸ் பிடிச்சு போனேன்.

திங்கட்கிழமை இரவு 7 மணி.

மறுநாள் சோலையார் போறதா சடர்ன் ப்ளான். அதனால நைட் சாப்பிட்டு தூங்கலாம் னு யோசிக்கும் போது... ராஜா அங்கிள் அவரோட எஸ்டேட் ப்ரெண்ட்ஸ் கூட பேசிட்டு இருக்குறதுல ரொம்ப பிசியா இருந்தார். வால்பாறை வந்ததுல இருந்து அந்த கல்யாணத்துலயே எல்லா வேளையும் சாப்பிட்டுடேன். நைட் புட் எஸ்டேட் ல அங்கிள் அரெஞ்ச் பண்ணுவார் னு பார்த்தா... அப்படி பண்றத்துக்கான அறிகுறியே இல்லை. ஏன்னா ! அங்கிள் அவ்வளவு பிசியா இருந்தார். அவர எதுவும் சொல்லவே முடியாது னு , சரி நாம கையில இருக்க காசுல பிஸ்கேட் வாங்கி சாப்பிடலாம் னு... நாங்க தங்கி இருந்த லைன் வீட்டுக்கு எதிரில் இருந்த கடைக்கு போய் பிஸ்கேட் கேட்டேன். அதுக்கு அந்த கடைக்காரர்... அந்த பெட்டிக்குள்ள இருக்கும் பாருப்பா எடுத்துக்கோ னு சொன்னார். எவ்வளவு னு ? கேட்க இருக்கறத கொடுப்பா னு சொன்னது... எனக்கு கொஞ்சம் ஆச்சரியம். அப்போ தான் புரிஞ்சிது... ஏன் ! வால்பாறைல அவ்வளவு மழை பெய்யுது னு. நல்ல மனசு இருக்க ஆளுங்க இருக்க ஊர்ல நல்லா மழை பெய்யும் னு கேள்விப்பட்டு இருக்கோம் ல அதான் போல னு நினைச்சிட்டு... அந்த பிஸ்கேட் வாங்கிட்டு போய் சாப்பிட்டு... என் டின்னர் முடிச்சிட்டு தூங்க போனேன் நைட் 10.30 மணிக்கு. அப்போ ராஜா அங்கிள் சாப்பிடலயானு கேட்டு சோறு வடிச்சாங்க. நான் சாப்பிட்டேன் சொல்லிட்டு தூங்கிட்டேன்... தூக்க கலக்கத்துல அன்னைக்கு நைட் எனக்கு னு ஒதுக்குன பெட்ல அந்த டீ எஸ்டேட் லைன் வீட்ல.

செவ்வாய்கிழமை காலை.

ராஜா அங்கிள் கிட்ட நான் சோலையார் போற விஷயத்த சொல்லிட்டு... அங்க இருந்து கிளம்பிட்டேன் காலையிலயே... மூடிஸ் எஸ்டேட் ல இருந்து. நான் கிளம்பி போனது மூடிஸ் பஸ் ஸ்டாப். அப்போ தான் அங்க போலீஸ் ஸ்டேஷன் ஒன்னு பார்த்தேன். நான் தங்கி இருந்த லைன் வீடுகள் ல இருந்த சிலர் சொன்னது அப்போ எனக்கு ஞாபகம் வந்துச்சு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, இங்க இருக்க போலீஸ் ஸ்டேஷன் மேல சிறுத்தை ஒன்னு இருந்தத பார்த்தாங்களாம். அது ரோட்ல போன ஒரு சின்ன பையன் மேலே பாய்ந்து... அவன் கழுத்த பிடிச்சி எஸ்டேட்க்குள்ள அந்த சின்ன பையன் அப்பா கண்ணு முன்னாடியே தூக்கிட்டு போய்ட்டுச்சி னு சொன்னாங்க. அந்த இடத்த கடந்து போனேன் மிரட்சியோடு பார்த்துட்டே. நான் மார்னிங் ப்ரேக் ஃபார்ஸ்ட் க்கு, அங்க இருக்க ஒரு சின்ன ஹோட்டல் ல கேரளா ஸ்பெஷல் புட்டு சாப்பிட்டேன். அப்போ தான் ஷேரன் கிட்ட இருந்து போன் கால் வந்துச்சி. அண்ணா நானும் அப்பாவும் மதியம் வால்பாறை வரோம்... அப்படியே உங்கள பிக்கப் பண்ணிக்கிறேன் சொன்னான் தம்பி. என்னடா ! ப்ளான் ல இப்படி ஆயிடுச்சே அப்படி னு... தம்பி வால்பாறை வரத்துக்குள்ள பக்கத்துல இருக்க எதாவது இடத்த பார்க்கலாம் னு முடிவு பண்ணி... ஆல்ரெடி நான் வால்பாறை பத்தி பண்ணி வெச்ச டூரிஸ்ட் ப்ளேஸ் ரிசர்ச்ல... நான் இருந்த இடத்துல இருந்து பக்கத்துல, அதாவது ஷாட் டிஸ்ட்டன்ஸ் ல இருக்க ஒரு இடத்துக்கு போலாம் னு அந்த இடம் இருக்க திசை நோக்கி, மூடிஸ் ல இருந்து நடந்தே போனேன் தனியே. 
தனியே நடந்து போய்ட்டு இருக்கும் போது,  ஒரு டிரவலர் வேன் வந்துச்சி. அதுல லிப்ட் கேட்டு போய் ஒரு ஜங்க்ஷன் ல இறங்கி, மறுபடியும் நான் போக வேண்டிய இடத்துக்கு நடந்து போனேன். கொஞ்ச நேரத்துல மறுபடியும் ஒருத்தர் எனக்கு லிப்ட் கொடுத்து என்னை கூட்டிட்டு போய் நான் போக வேண்டிய இடத்துல இறக்கி விட்டார். அவர் கூட பயணித்து போன சிறிது நேரத்துல... என்னை பற்றியும் என் டிரிப் பத்தியும் அவர்க்கிட்ட டீடயிலா சொல்லிட்டே போனேன் அவர்கூட பைக்ல. நான் போய் சேர்ந்த இடம் நல்லமுடி பூஞ்சோலை.
வால்பாறை ல இருந்து 11 கி.மீ தொலைவில் இருக்க ஒரு அமைதியான காட்சிமுனை தான் இந்த நல்லமுடி பூஞ்சோலை. இங்க போகுற வழியெங்கும் தேயிலை தோட்டங்களும், அதன் பேரழகான காட்சி அமைப்பும் வேற லெவல் லுக்ல இருக்கும். இந்த காட்சி முனையில நின்னு நாம கண் முன்னே இருக்க அகன்ற பள்ளத்தாக்கு அழகையும், ஆபத்தையும் ஒரு சேர பார்க்குற தருணம் அவ்வளவு ரம்மியமா இருக்கும். தூரத்துல தெரியுற அருவியும், அதன் அருகில் இருக்க ஆதிவாசிகள் கிராமம்... அந்த வீயூ பாயிண்ட் ல இருந்து பார்க்குறது மட்டும் இல்லமா... தொலைவில் தெரியுற தென்னியாந்தியாவின் உயர்ந்த சிகரம்... கேரளாவின் மூணாறு பக்கம் இருக்க ஆனைமுடி சிகரத்தின் காட்சி அந்த இடத்தின் சிறப்பு அம்சம். அந்த இடத்துல இன்னொரு ஸ்பெஷல் விஷயம் இருக்கு. அவர் தான் கண்டேன் கடவுள் ஆங்கிலத்தில் அவர Seen God னு சொல்றாங்க. அந்த நல்லமுடி பூஞ்சோலை ல இறைவன் இங்க இருக்க ஒரு பெரியவருக்கு காட்சி தந்தார் னும் அவர் தினமும் அங்க பூஜை பண்ண வரார் னு என்கிட்ட சொன்னாங்க. அங்க இருக்க ஒரு கோயில் அந்த இடத்தின் இன்னொரு சிறப்பு.
நான் அந்த இடத்துக்கு போன டைம் ல யாரையும் அந்த வீயூ பாயிண்ட்க்கு உள்ளே அனுமதிக்கவே இல்லை. கொஞ்ச நேரம் ஆகும் னு சொல்லிட்டாங்க. ஆனா என்னை பைக் ல கூட்டிட்டு போனவர், அங்க இருந்த ஒரு அண்ணா கிட்ட என்னை இன்ரோ பண்ணி நான் சென்னை ல இருந்து வந்த விஷயத்த சொல்லி உள்ளே கூட்டிட்டு போக சொன்னார். அந்த அண்ணா வும் அங்க இருந்த வனக்காவல்ர் கிட்ட ஏதோ சொல்லிட்டு என்னை மட்டும் உள்ளே கூட்டிட்டு போனார். அந்த செக்போஸ்ட் ல இருந்து தேயிலை பயிர்கள் ஊடே நடந்து போன கொஞ்ச தொலைவில் அந்த வீயூ பாயிண்ட். அங்க இருந்து அனைத்து அழகையும் கொஞ்ச நேரம் தனியே இருந்து ரசிச்சிட்டே... அங்க இருக்க கோயில்க்கு போய் ஒரு தரிசனம் பண்ணிட்டு... நானும் அந்த அண்ணா வும் ரிடர்ன் கிளம்பும் போது சொன்னார்... இங்க யானைகள் நடமாட்டம் பல நேரங்கள்ல இருக்கும் னு யானைகள் அங்க வந்து போன அடையாளங்கள் ல எனக்கு காட்டிட்டு... அந்த தேயிலை தோட்டத்துக்கு அந்த பக்கம் காட்டு எருமை ஒண்ணு நிக்குது நாம இங்க தனியா இருக்கறது ரிஸ்க் னு என்னை வெளியே கூட்டிட்டு போனார். நாங்க பாதி தூரம் வந்த அப்போ பலர் உள்ளே நடந்து வந்துட்டு இருந்தாங்க. அவங்களை உள்ளே கூட்டிட்டு போக அந்த அண்ணா அவங்க கூட போனார். நான் தனிமையில் திரும்பி வர வழியில் தான் அந்த பெரியவர மீட் பண்ணேன். முன்னரே சொன்ன மாறி அந்த இடத்துல இறைவனை பார்த்தார் னு அங்க இருக்க மக்கள் நம்புற அந்த வயதான பெரியவர். அவர்கிட்ட பேசலாம் னு போன அப்போ... இன்னொரு ஓல்டு பாய்ஸ் கேங் அங்க வர அவங்களும் அந்த பெரியவர்கிட்ட ஆசீர்வாத வாங்கிட்டு பேச்சை கொடுத்தாங்க அவர்கிட்ட. அப்போ தான் அந்த பெரியவர் எங்க கிட்ட எப்படி எப்போ இறைவன் அவருக்கு காட்சி அளித்தார் னு எக்ஸ்ப்ளைன் பண்ணி காட்டி... டீடாயிலா எங்க கிட்ட சொல்லி எல்லாரையும் ப்ளாசிங் பண்ணார். அவர் அந்த காலத்துலயே எம்.ஏ. படிச்சவர் னு சொன்னார். அவர் பேசின ஆங்கில உச்சரிப்பு எங்களுக்கு எல்லாம் ஆச்சாரியம். அங்க இருந்த சிலர் அவருக்கு காணிக்கையை காசு கொடுத்தாங்க... அப்புறம் அந்த பெரியவர் கோயிலுக்கு பூஜை பண்ண எங்க கிட்ட இருந்து விடை பெற்று சென்றார். 
நான் அங்கு இருந்து கிளம்பும் முன் அங்கே என்னுடன் அந்த பெரியவரிடம் பேசிய ஓல்டு பாய்ஸ் டீம் ல இருக்கவங்க... என்னிடம் தனியாவ தம்பி வந்தீங்க ? னு கேட்க நான் நடந்த முழு கதையும் சொல்லிட்டு, அங்க இருந்து வால்பாறை போற விஷயத்த சொன்னேன். அப்போ அவர்களில் ஒருவர் என்னிடம் அவர்களும் நல்லமுடி பூஞ்சோலையில் இருந்து அடுத்து தொங்கு பாலம் ஒன்றை பார்த்து விட்டு வால்பாறை செல்வதாக கூறினார். எனக்கு வால்பாறை செல்ல பேருந்து வசதி எதுவும் இல்லாத காரணத்தால், அவர்களில் ஒருவர் என்னிடம் அவர்களுடன் டிராவலர் வேனில் வர அழைத்தார். நானும் சரி என அவர்களுடன் ஜாயின் பண்ணிக்கிட்டேன். நாங்க அந்த இடத்தில் இருந்து கிளம்பும் முன் அவர்களில் ஒருவர் எனக்கு லெமன் டீ ஒன்று வாங்கி கொடுத்து குடிக்க சொன்னார். நான் மறுக்க... அவர் குடிடா என கட்டாப்படுத்தி குடிக்க சொன்னாங்க. சரி னு அந்த அருமையான ப்ரெஷ் லெமன் டீ யை குடிச்சிட்டு நாங்க வால்பாறை நோக்கி புறப்பட்டோம். போற வழியில அவங்க தூக்கு பாலம் போறத சொல்லி என்னையும் கூட்டிட்டு போனாங்க. ஜூனியர் தம்பி வால்பாறை வர லேட் ஆகும் என்பதால் நானும் அவர்களுடனே சென்றேன். அந்த ஓல்டூ பாய்ஸ் டீம் கோயம்புதூர் பக்கம் இருக்க ஒரு கிராமத்தை சேர்ந்தவங்க. வருஷ வருஷம் இது மாறி ஒரு வேன் புக் பண்ணிட்டு ஊர் சுற்ற கிளம்பிடுவாங்க னு சொன்னாங்க. அவங்க வேன் ல எல்லாரும் துண்டை விரிச்சி ரம்மி ஆடிட்டு வந்தாங்க.
அவங்க போலாம் னு ப்ளான் பண்ண தூக்கு பாலத்துக்கு போக அன்னைக்கு ஏதோ காரணத்தால் அனுமதி இல்லனு சொல்லவே, அவங்க வழியில இருக்க ஒரு அணை யை நோக்கி போனாங்க. அந்த அணையின் பெயர் நீரார் டேம். அங்க போய் கொஞ்ச நேரம் சுற்றி பார்த்துட்டு அங்க இருந்து எங்க பயணம் வால்பாறை நோக்கி போனோம்.

செவ்வாய்கிழமை மதியம் 2.30 மணி

நான் என்னை ஃப்ரீ லிப்ட் கொடுத்து அழைத்து வந்த ஓல்டூ பாய்ஸ் க்கு த்ங்க்ஸ் சொல்லிட்டு, அவங்க வேன்ல இருந்து வால்பாறை ல இறங்கிட்டேன். நான் என் ஜூனியர் ஷேரன் சன்னி தாமஸ் க்கு வெயிட் பண்ணிட்டு இருந்த சிறிது நேரத்தில் அவன் அப்பா கூட நான் இருந்த இடத்துக்கு வந்தான். அவன் அப்பா க்கு வால்பாறை ல சில வேலைகளை முடிக்கணும் னு அதை முடிச்சிட்டு வர போனார். அப்புறம் கொஞ்ச நேரத்துல நாங்க மூணு பேரும் வால்பாறையில இருந்து சோலையார் நோக்கி பைக்ல புறப்பட்டோம்.

சோலையார் - தமிழக கேரள எல்லை அமைந்துள்ள ஒரு சின்ன மலை கிராமம். இங்க தான் தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய அணை இருக்கு. வால்பாறை ல இருந்து 25 கி.மீ. தொலைவில். நாங்க வால்பாறையில இருந்து சோலையார் வந்த பாதி தூரத்துக்கும் அதிகமான சாலை சோலையார் அணையை ஒட்டியே அமைந்து இருந்துச்சி. அரை மணி நேர பயணத்துல நாங்க சோலையார் வந்தடைந்தோம். அன்னைக்கு நைட் என் ஜூனியரோட காட்டேஜ் ல தான். நாங்க அங்க போய் என் பேக் வெச்சிட்டு, அந்த ஊர்லயே உயரமான ஒரு மலை மேலே இருக்க என் ஜூனியர் ஷேரன் வீட்டுக்கு போய் சின்ன விசிட் அடிச்சோம். அந்த வீடு அமைந்து இருந்த இடமும், அதை சுற்றி இருந்த மரங்கள் அப்படி னு வேற லெவல் வீயூ. அவங்க வீட்டுல விதவிதமான பழ மரங்கள், மிளகு செடி னு ஒரு ஹில் ஸ்டேஷன் ல இருக்க மாறி எல்லாமே இருந்துச்சி. அந்த ஊரும் ஒரு சின்ன ஹில் ஸ்டேஷன் தான். நான் ஜூனியர் கிட்ட இங்க அனிமல்ஸ் ப்ராப்ளம் இருக்க னு கேட்டத்துக்கு, அப்பப்போ வரும் னா யானை, கரடி, சிறுத்தை னு வீட்டுக்கு எதிரே இருக்க சரிவான பள்ளத்தாக்கு ல வரும். ஒரு முறை வீட்டுக்கு உள்ள இருந்த பூனையை புலியா இல்ல சிறுத்தையா னு தெரியல ஒன்னு வந்து தூக்கி போய்ட்ச்சி... அத பார்த்த என் தங்கச்சி க்கு ஒரு மாசம் பூர ஜூரம் னு சொல்ல இத நம்பலமா வேணாம னு அப்படியே நான் கேட்டுக்கிடேன். கொஞ்ச நேரத்துல நானும் அவனும் அவங்க வீட்டுக்கு எதிரில இருக்க டேம் க்கு ஒரு வாக் போலாம் னு போனோம். புதர் மண்டிய பாதையில அவன் என்னை கூட்டிட்டு போய்... இது கரடி வர வழி னு அசால்ட்டா சொன்னான். நானும் எப்படியோ அந்த இடத்துல இருந்து டேம் க்கு போய் நல்ல சைட் சீயிங் பார்த்துட்டு... அணையில இறங்கி போட்டோஸ் வீடியோஸ் க்ளிக் பண்ணிட்டு... அங்க இருந்து கிளம்பி அந்த டேம் ல இருக்க பயன்பாடு அற்ற ஒரு பார்க் க்கு போய் அந்த டேம் முழுசா சுற்றி பார்த்தோம். நாங்க போன டைம் ரிப்பேர் வொர்க்ஸ் கொஞ்சம் நடந்துட்டு இருந்துச்சி. அங்க சிலர் டேம்ல குளிச்சிட்டு இருந்தாங்க . அப்போ தான் ஷேரன் சொன்னான் இங்க குளிக்கறது ரொம்ப ரிஸ்க். ஹைட்ரோ பவர் ஸ்டேஷன் ல பவர் ப்ரொடியூஸ் பண்ணும் போது இந்த டேம்ல குளிச்ச பல பேர் தண்ணில முழ்கி செத்து போயிருங்காங்க னு சொன்னான். இங்க டேம் உள்ள இருக்க டானல் ல தண்ணி வேகமா இழுக்கும் போது அந்த கோர சம்பவம் நடக்கும் னு சொன்னான். அதுக்கப்புறம் நாங்க அப்படியே அங்க இருந்து நடந்தே அந்த ஊர சுத்தி பார்த்தோம். 

ஒரு கடையில சுடச்சுட காபி குடிச்சுட்டு, கூடவே பஜ்ஜி சாப்டுட்டு, அந்த ஊர்ல ஒரு இடத்துக்கு ஜூனியர் என்னை கூட்டிட்டு போனான். எங்கடா கூட்டிட்டு போறான் னு பார்த்த... தமிழ்நாடு கேரளா செக்போஸ்ட்.

அங்க இருந்த ஒரு கடையில என்ன சிகரேட் வாங்க சொன்னான். எதுக்குனா ! அந்த கடைக்காரர் அவங்க அப்பா கிட்ட சொல்லிட கூடாது னு தான். நானும் அவனுக்கு வாங்கி கொடுத்துட்டு நாங்க செக்போஸ்ட்ட தாண்டி போய் மறைவா இருக்க ஒரு மலை பாறைக்கு பின்னாடி போய் திருட்டு தம் அடிச்சான் ஜூனியர் ஷேரன். நமக்கு அது மாறியான பழக்கம்ல இல்லை. அங்க கொஞ்ச நேரம் டைம் ஸ்பேன்ட் பண்ணிட்டு நாங்க காட்டேஜ் க்கு போனோம். சூரியன் தேயிலை தோட்டங்கள் சூழ்ந்த மலையில மறையிற காட்சியை... நல்லா செம வீயூ ல பார்த்துட்டு கொஞ்சம் இருட்டு ன நேரத்துல நைட் டின்னர்க்கு சாப்பாத்தியும் சிக்கன் க்ரேவியூம் வர, நல்லா சாப்பிட்டு மறுநாள் ஒரு இடத்துக்கு போகலாம் னு ப்ளான் பண்ணிட்டு தூங்கிட்டேன்.

புதன்கிழமை காலை 7 மணி.

சோலையார் ல ஜூனியரின் அப்பாவோட காட்டேஜ்ல நைட் ஸ்டே பண்ணிட்டு மறுநாள் காலையில எழுந்தேன். நானும் ஜூனியர் ஷேரனும் ஆல்ரெடி ப்ளான் பண்ணி வெச்ச மாறி... மார்னிங் அந்த ஊர்ல இருந்து பஸ் ல அந்த இடத்துக்கு போலாம் னு ப்ளான். அந்த ஊர்ல இருந்து ஒரு நாளைக்கு ரெண்டு வாட்டி தான் நாங்க போலாம் னு முடிவு பண்ண இடத்துக்கு பஸ். ஆனா நாங்க அந்த பஸ் ல போலாம் னு இருந்த அப்போ சின்ன சேஞ்ச் ப்ளான் ல . ஷேரனோட அப்பா எங்கள ஒரு கார்ல நாங்க போற இடத்துக்கு கூட்டிட்டு போக ஒருத்தர் கிட்ட சொல்லிருக்கார். அவர் கேரளாவில் இருக்க அங்கமாலி க்கு ஒரு வேளையா போறவர். அவர்கூட கார்ல நாங்க போக வேண்டிய இடத்துக்கு ஜூனியரோட அப்பா அனுப்பி வெச்சார். ஏன்னா ! நாங்க போகுற இடம் அந்த கார்க்காரர் போற வழியில இருக்கறதால. மார்னிங் ப்ரேக்பாஸ்ட் முடிச்சிட்டு நானும் ஜூனியரும் நானோ கார்ல ஏறி நாங்க முடிவு பண்ணி வெச்ச ஊருக்கு கிளம்பினோம்.

அத்திரப்பள்ளி நீர்வீழ்ச்சி. தமிழக கேரள எல்லைக்கு அருகே திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பிரபலமான வாட்டர் ஃபால்ஸ். தென் இந்தியாவின் நயாகரா அப்படி னு இதுக்கு ஒரு நிக் நேம் கூட இருக்கு. பல திரைப்படங்கள் இந்த அருவியில் ஷூட் பண்ணிருப்பாங்க. பாகுபலி ல ப்ரபாஸ் லிங்கத்த தூக்கிட்டு வரது, வேட்டைக்காரன் ல விஜய் என்னகவுன்டர்ல தப்பிக்க குதிச்சிது, ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ னு சூர்யவம்சம் ல வந்தது, பையா அடடா மழைடா அடை மழைடா சாங் னு பல திரைப்படங்கள் இங்க ஷூட் பண்ணிருக்காங்க. ஆனாலும் கமல்ஹாசன் நடிச்ச புன்னகை மன்னன் படத்தின் நிறைய காட்சிகள் இங்க காட்சிப்படுத்தப்பட்ட காரணத்தால் இதை புன்னகை மன்னன் ஃபால்ஸ் னு கூட சொல்லுவாங்க. இந்த அருவிக்கு போக தமிழ்நாடு கேரளா செக்போஸ்ட்ட தாண்டி அடர்ந்த காட்டுல வேகமா கார்ல பயணிச்சி போனோம். நாங்க இருந்த சோலையார்ல இருந்து 55 கி.மீ. ஆனா அந்த தூரத்த கடக்க இரண்டு மணி நேர சாலை பயணம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காடுகளும்... சாலையை ஒட்டியே பெரிய நீர்தேக்கம் னு அந்த கேரளத்து வனச்சாலை செம ரம்மியமானது. நாங்க போற வழியில நடுக்காட்டுள்ள அந்த கார் டிரைவர் சாலை ஓரமா காரை நிறுத்தி சிறிது நேரம் சாலைஓரம் இருந்த அட்டைப்பூச்சிகளை பிடிச்சி வெச்சிக்கிட்டார்.


ஏதோ தெரிஞ்ச ஒருத்தர்க்கு அதை வெச்சு கால்ல ஏதோ டிரிட்மென்ட் பண்ணனும். சில நிமிடங்கள் காரை விட்டு இறங்கி சாலை ஓரம் நடந்து சென்ற சில வினாடிகளில்... காலில் ஏதோ கடிக்க செருப்பை எடுத்துட்டு பார்த்தால் அட்டைப்பூச்சிகள். லைட்டா ரத்தம் குடிக்க ஸ்டாட் பண்ணிட்டு இருந்துருக்கு. அப்புறம் அதை எடுத்து தூக்கி போட்டுட்டு எங்களோட கார் பயணம் கன்டினியூ ஆச்சு. நாங்க போற இடத்த நெருங்குற வேளையில ஒரு ரம்மியமான ஆற்றுப்பாலத்தை கடந்து அத்திரப்பள்ளி போய் ரீச் ஆனோம். நாங்க அத்திரப்பள்ளி போகுறத்துக்கு சில கி.மீ முன்னாடி இருந்த நீர் அற்ற வாளச்சல் நீர்வீழ்ச்சிய கடந்து போனோம்.

புதன்கிழமை மதியம் 12 மணி

நாங்க போன கார் டிரைவர்க்கு அங்கமாலி ல அவசர வேளை இருக்குறதால, எங்கள இறக்கி விட்டுட்டு உடனே கிளம்பிட்டார். இன்னொரு தகவல்... என் மொபைல் நெட்வொர்க் ஏர்டெல். நான் இருந்த சோலையார் ல வொர்க் ஆகமா இருந்துச்சி. மலை பிரதேசங்கள்ல பெரும்பாலும் பிஎஸ்என்எல் தான். நான் அத்திரப்பள்ளிய நெருங்கும் போது எனக்கு ராஜா அங்கிள் கிட்ட இருந்து போன் கால் வந்துச்சி. அவர் என்கிட்ட நலம் விசாரிச்சிட்டு, நான் அவர்கிட்ட பேசிட்டு இருக்கும் போது நாங்க அத்திரப்பள்ளி ரீச் ஆனோம். நான் அவர்கூட பேசிட்டே கார்ல இருந்து இறங்கிட்டேன். காரும் வேகமா அங்கமாலி நோக்கி போய்ட்டுச்சி. நான் போன் கால் பேசிட்டு ஜூனியர் ஷேரன் கிட்ட எங்க என்னோட பேக் னு கேட்கும் போது தான் என்னோட பேக் க அந்த கார்லயே மிஸ் பண்ணது தெரிஞ்சுது. லைட்டா மைன்ட் ஃபக் ஆயிடுச்சி ரெண்டு பேருக்கும். சரி போனது போகட்டும், அப்புறம் அவருக்கு கால் பண்ணி பேக் வாங்கிங்கலாம் னு வந்த இடத்த பார்க்க போனோம்.

சாலக்குடி ஆறு... மலைகள் ல பாய்ந்து வந்து நாங்க இருக்க அந்த இடத்துல 80 அடி உயரத்துல... அமெரிக்கா கனடா எல்லையில் இருக்க நயகரா நீர்வீழ்ச்சி போல பரந்து விரிந்து மேலே இருந்து கீழே ஆர்ப்பரிக்குற அந்த அழகு காட்சி தான் அத்திரப்பள்ளி அருவியோட சிறப்பு. நாங்க நுழைவாயில கடந்து மேலே இருக்க ஆற்றுக்கிட்ட போய் பார்த்தோம். அந்த ஆறு நீர்வீழ்ச்சியா விழறத்துக்கு முன்னாடி... பலர் மேலே இருக்க ஆற்றங்கரை ஓரமா குளிச்சிட்டு இருந்தாங்க. ஆபத்தான ஆழமான பகுதிக்கு போக கூடாது னு கயிறு ல தடுப்பும் போட்டு வெச்சி இருந்தாங்க. வேட்டைக்காரன் படத்துல விஜய்ய என்கவுன்டர் பண்ண ட்ரை பண்ற அப்போ, ஒரு அருவியில் குதிப்பார். அந்த சீன் இங்க தான் ஷூட் பண்ணியிருப்பாங்க. நாங்க சிறிது நேரம், அங்க அந்த கரையோரம் ஆற்றின் அழகை ரசிச்சிட்டு... அருவியின் அழகை ரசிக்க அந்த மலையில சில மீட்டர் தூரம் கீழே இறங்கி போனோம். அங்க போய் பால் போல கொட்டுற அருவிக்கு முன்னாடி நின்னு அந்த இயற்கையின் பேரழகை முழுமையா ரசிச்சோம். தென்மேற்கு பருவகாலங்களில் கேரளா ல பொழியிற மழை அப்போ இந்த அருவியில் நீர்வரத்து ஆக்ரோஷமா இருக்குற டைம்ல... கீழே அருவிக்கு சில மீட்டர் தொலைவில் நின்று பார்க்க சான்ஸ் ரொம்பவே கம்மி தான். அந்த அருவியில் நாங்க போன மே மாசம் கூட அவ்வளவு சீற்றத்தோடு தண்ணி கொட்டிச்சு. நானும் தம்பியும் எவ்வளவு போட்டோஸ் விடியோஸ் எடுக்க முடியுமோ அங்க அருவிக்கு பக்கத்துல இருந்து எடுத்துட்டு... கிளம்பும் போது அருவியில குளிக்காமலே அந்த சாரலில் முழுசா நனைந்து ஈரத்தோடு மலைக்கு மேலே வந்தோம். மதிய சாப்பாடு ஜூனியரும் நானும் அங்கேயே ஒரு ஹோட்டல் ல சாப்பிட்டு சிறிது நேரத்துல கிளம்ப ரெடி ஆனோம். 



கையில இருந்த பேக் கார்லயே போய்டுச்சி. கையில கொண்டு வந்த காசுல 150 ரூபாய் தான் இருந்துச்சி. அந்த கார் அங்கமாலி போய்ட்டு எப்போ சோலையார் வருதோ அப்போ அந்த பேக்க எடுத்து பார்சல் அனுப்புறேன் னு ஜூனியர் சொன்னதால, நான் அங்க இருந்து ஜுனியர் தம்பி கொடுத்த ஐம்பது ரூபாய் எக்ஸ்ட்ராவா வெச்சிக்கிட்டு சாலக்குடி கிளம்பினேன். அங்க இருந்த பஸ்ல என்னை ஷேரன் ஏத்திவிட்டுட்டு அவன் சோலையார் போற பஸ்ல அவன் ஊருக்கு கிளம்பினான். அத்திரப்பள்ளில இருந்து சோலையார் போய் அங்க இருந்து வால்பாறை போய் அப்புறம் பொள்ளாச்சி வழியா கோயம்புத்தூர் போய் ரயில் ஏறி சென்னை போறது ரொம்ப நேரம் அன்ட் தூரம் அதிகம் ஆகும் னு நான் சாலக்குடி ல இருந்து சென்னை போற ரயில் ஏறலாம் னு ஐடியால தான் இங்க வந்தேன். நான் ஏறுன பஸ் ஒரு மணி நேர பயணத்துல சாலக்குடி பஸ் ஸ்டான்ட் போய் சேர்ந்தது. ரொம்ப ரம்மியமான மலைபிரதேச பஸ் பயணம். 25 ரூபாய் பஸ் டிக்கெட். நல்ல வேகம். பஸ்ல ஸ்பீக்கர்ல ஓடின பாட்டு எல்லாம் தமிழ் பாட்டு தான். நான் பஸ் ஸ்டான்ட் ல இருந்து எனக்கு தெரிஞ்ச அரைகுறை மலையாளத்துல அங்கு இருக்கவங்க கிட்ட கேட்டு ரயில்வே ஸ்டேஷன் போற பஸ்ல ஏறி சாலக்குடி ரயில்வே ஸ்டேஷன் போய் இறங்கினேன். 

புதன்கிழமை மாலை 4 மணி.

ஆழப்புழா ல இருந்து சென்னை போற சூப்பர் பார்ஸ்டு எக்ஸ்பிரஸ் டிரைன்ல சென்னை போறதா ஐடியா. ஆனா கையில அன்ரிசர்வ்ட் ல போற அளவுக்கு கூட காசு இல்ல. மொழி தெரியாத ஊர்ல என்ன பண்றது னு யோசிச்சிட்டே... அந்த டிரயின்ல டிக்கெட் எடுக்கமா வித்தவுட்ல போக ப்ளான் போட்டேன். கேரளா ல டிக்கெட் இல்லாம போறது ரொம்பவே ரிஸ்க். நான் போன ரயில் பயணங்களிலயே கேரளால தான் அன்ரிசர்வ்டு ல கூட செக் பண்ணுவாங்க. ஆனா டிக்கெட் எடுக்க காசு இல்லாத சூழ்நிலை என்னை வித்தவுட் ட்ராவல் பண்ண வெச்சிது. நானும் சரி டிக்கெட் எடுக்காம தானே போறோம். இருக்க காசு க்கு நல்ல சாப்பிடுவோம் னு, ஸ்டேஷன் முன்னாடி இருக்க பேக்கரில காபி அப்புறம் பப்ஸ் னு நல்லா சாப்பிட்டேன். அந்த பேக்கரில இருந்த சேட்டா நான் போட்டு இருந்த எம் சி சி பெயர் போட்ட டிசார்ட் வெறிச்சி பார்த்துட்டு இருந்தார். யாரோ அவருக்கு தெரிஞ்சவங்க அங்க படிச்சிருப்பாங்க னு நானும் நினைச்சிக்கிட்டேன். குடிக்க ஒரு தண்ணி பாட்டில் வாங்கிட்டு ஸ்டேஷன்ல டிரையின்க்கு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். சென்னை போற ரயில் இரண்டு மணி நேரம் லேட்ட சாலக்குடி ஸ்டேஷன் வர நான் அன்ரிசர்வ்ட் கோச்ல லக்கேஜ் வெக்கிற மேல் சீட்ல ஏறி இடத்த பிடிச்சி வாட்டர் கேன்ன தலையனை ய வெச்சி படுத்துகிட்டேன். உடனே நல்ல உடல் அசதில தூங்கிட்டேன். 

வியாழக்கிழமை காலை 8 மணி.

நான் போற ரயில் காலையில அரக்கோணம் ஸ்டேஷன் வந்த அப்போ முழிப்பு வந்து எழுந்து படிக்கட்டுல உட்கார்ந்துட்டே வந்தேன். கையில டிக்கெட் இல்லை. சென்ட்ரல் ஸ்டேஷன்ல மாட்டிக்க கூடாது னு நினைச்சிட்டு இருக்கும் போது, நான் போன ரயில் பெரம்பூர் ஸ்டேஷன்ல ப்ளாட்பாரம் விட்டு கொஞ்சம் தாண்டி போய் நின்னுச்சி. நான் உடனே ரயில்ல இருந்து இறங்கிட்டேன். அங்க இருந்து நேரா டிக்கெட் கவுண்டர் போய், தாம்பரம் போக 10 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்துட்டு... சென்ட்ரல் போற ட்ரையின்ல ஏறி போனேன். அப்புறம் அங்க இருந்து தாம்பரத்துக்கு பார்க் ஸ்டேஷன் போய் மின்சார ரயில் ஏறி ஒருவழியா வீடு போய் சேர்ந்தேன். கையில வீட்டுக்கு போன அப்போ இருந்த காசு 80 ரூபாய் மிச்சம். அஞ்சு நாளைக்கு முன்னாடி எந்த ப்ளான் இல்லாம திடீர் னு கிளம்பி வீட்டுல கொடுத்த 900 ரூபாய் வெச்சிக்கிட்டு... தனியா ஃபர்ஸ்ட் டைம் நான் ஊரு சுத்திட்டு மறக்க முடியாத அனுபவங்களோட... நல்லா என்ஜாய் பண்ணிட்டு வந்தது எப்பவுமே மறக்க முடியாத டிரிப். இந்த டிரிப் க்கு பிறகு தான் ஊர் சுற்றனும் னு தனியாக, நண்பர்கள் கூட அப்படி னு தமிழ்நாடுல பெரும்பாலன இடங்களுக்கும், இந்தியாவில் சில இடங்களுக்கும் டிரிப் போய்ட்டு வந்துட்டு இருக்கேன். ஆனா எல்லாத்துக்கும் இந்த டிரிப் கற்று கொடுத்த தைரியமும் ஆச்சரியமும் தான் முக்கிய காரணம்.

- பயணங்கள் தொடரும்.

 பல நாட்கள்ல எழுதணும் னு நினைச்சி இப்போ இந்த லாக்டவுன்ல இந்த பயண அனுபவங்கள் ல எழுதி முடிச்சிருக்கேன். இன்னும் சில பயண அனுபவங்களையும் முடிந்த அளவு இந்த லாக்டவுன் காலத்துல சீக்கிரம் எழுதி முடிக்கணும் னு திட்டமிட்டு இருக்கேன். அடுத்த பயண கட்டுரையில் சந்திப்போம்.





ஆகபெரும் அதிசயம் அருவி

“Waterfalls are exciting because they have power, they have rainbows, they have songs, and they have boldness and craziness!” - Unknown ...